கொரோனா சிகிச்சை, பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வகங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

கொரோனா சிகிச்சை மற்றும் பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வகங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
கொரோனா சிகிச்சை, பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: தனியார் ஆஸ்பத்திரி, ஆய்வகங்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு
Published on

கோவை,

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி மற்றும் ஆய்வகங்களின் பிரதிநிதிகள், சுகாதாரத்துறை டாக்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆய்வகங்களில் கொரோனா தொற்று குறித்த பரிசோதனைகள் அதிகளவில் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான். அதிலும் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தினமும் 7 ஆயிரம் பேர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது கொரேனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.

கோவை மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான மருத்துவ மையமாக திகழ்ந்து வருகிறது. இதனால் இங்குள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற அண்டை மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் வருகின்றனர். கொரோனா தொற்று போன்ற பேரிடர் காலங்களில் தனியார் ஆஸ்பத்திரிகள் தங்களிடம் சிகிச்சைக்காக வரும் நேரயாளிகளுக்கு உரிய சிகிச்சையை தாமதமின்றி வழங்குவதுடன், அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டும் பெற வேண்டும். அதுபோல தனியார் ஆய்வகங்கள் தங்களின் ஆய்வகங்களில் பரிசோதிக்கப்படும் மாதிரிகளின் முடிவுகளை தாமதமின்றி வெளியிட வேண்டும். அவற்றில் குறிப்பாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். விரைவாக அவர்களின் தொடர்பு விவரத்தை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும், தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கென்று அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கவேண்டும். கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றினை மேலும் குறைத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தனியார் பரிசோதனை மையங்கள் மிகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 13 ஆயிரத்து 747 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 15 லட்சத்து 36 ஆயிரத்து 21 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக தினமும் மாநகர மற்றும் ஊரகப்பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 40 ஆயிரத்து 481 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதில், தற்போது வரை 37 ஆயிரத்து 117 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று 31 ஆயிரத்து 709 நபர்கள் தற்போது வரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வடகிழக்கு பருவமழையையொட்டி கோவை மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் பருவமழை காலங்களில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில் கவனமுடன் செயல்பட வேண்டும். ஆற்றங்கரையோரங்களில் குடியிருக்கும் பொதுமக்களை கனமழையின் போது பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை காரணமாக தண்ணீரால் உண்டாகும் வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க குடிநீர் சுத்தம் செய்து வினியோகம் செய்தல், தெருக்களில் கிருமி நாசினிகள் கொண்டு அடிக்கடி சுத்தம் செய்தல் போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா தொற்று பேரிடர் காலத்திலும், பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளில் எவ்வித சுணக்கமும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளான மேம்பாலம் பணிகள், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்பட அனைத்து பணிகளையும் தொடர்ந்து முனைப்புடன் செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, டி.ஐ.ஜி. நரேந்திர நாயர், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் (பொ) ரூபன்சங்கர்ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் (பொ) காளிதாசு, இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் நிர்மலா, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள்) கிருஷ்ணா, துணை இயக்குனர் ரமேஷ்குமார் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆய்வகங்களின் பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com