பல்வேறு வழித்தடங்களில் 16 புதிய பஸ்கள் திருப்பூரில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

பல்வேறு வழித்தடங்களில் 16 புதிய பஸ்களின் இயக்கத்தை திருப்பூரில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பல்வேறு வழித்தடங்களில் 16 புதிய பஸ்கள் திருப்பூரில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
Published on

திருப்பூர்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருப்பூர் மண்டலத்திற்கு 23 புதிய பஸ்கள் வழங்கப்பட்டது. இதில் 7 பஸ்களை கடந்த 14-ந்தேதி சென்னையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் மீதமுள்ள 16 பஸ்களுக்கான இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று திருப்பூர் பழைய பஸ்நிலையத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி கொடியசைத்து பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, எம்.எல்.ஏ.க்கள் சு.குண சேகரன்(தெற்கு), கே.என். விஜயகுமார்(வடக்கு), தனியரசு (காங்கேயம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பில் திருப்பூர் மண்டலத்திற்கு 23 பஸ்கள் வழங்கப்பட்டது. இந்த பஸ்களின் மதிப்பு ரூ.5 கோடியே 75 லட்சம் ஆகும். இதில் 7 பஸ்களின் இயக்கத்தை முதல்-அமைச்சர் கடந்த 14-ந்தேதி தொடங்கி வைத்தார். தற்போது 16 புதிய பஸ்களின் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்கள் பல்வேறு வழித்தடங்களில் செல்ல உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 15 நாட்களாக சுற்றி வந்த சின்னதம்பி யானை, கும்கி யானைகளை கொண்டு பத்திரமாக மீட்டு டாப்சிலிப் வன பகுதியில் கொண்டு விடப்பட்டுள்ளது. இந்த யானை உடுமலை பகுதியில் சுற்றி திரிந்தபோது பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை அழித்துவிட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் உதவியுடன் பயிர் சேதத்தை கணக்கிட்டு அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதை அடிப்படையாக கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பாலி கிளினிக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். இங்கு கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளை கொடுப்பது மட்டுமின்றி, ஸ்கேன் வசதி, எக்ஸ்ரே வசதி உள்ளிட்டவை நிறுவப்பட உள்ளது. இதில் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உயர் சிகிச்சையை பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல பொது மேலாளர் கோவிந்தராஜ், துணை மேலாளர்கள் முத்துகிருஷ்ணன்(வணிகம்), வேலுசாமி(தொழில்நுட்பம்), முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com