பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் மந்திரி பதவி; எச்.விஸ்வநாத் வலியுறுத்தல்

பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று எச்.விஸ்வநாத் வலியுறுத்தியுள்ளார்.
பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் மந்திரி பதவி; எச்.விஸ்வநாத் வலியுறுத்தல்
Published on

ராய்ச்சூர்,

குமாரசாமி தலைமையில் நடந்து வந்த கூட்டணி அரசு கவிழ்ந்த நிலையில், தற்போது எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு செயல்பட்டு வருகிறது. பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறி வந்தார்.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு மட்டுமே மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்து உள்ளது. இதனால் எடியூரப்பாவும், எம்.எல்.ஏ.க்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் தேவதுர்கா அருகே நடந்து வரும் மல்லுமடா கலாசார நிகழ்ச்சியில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கத்தின் போது, பா.ஜனதா அரசு அமைய காரணமாக இருந்த 17 பேருக்கும் கண்டிப்பாக மந்திரி பதவி வழங்க வேண்டும். கூட்டணி அரசு கவிழ்வதற்கும், தற்போது பா.ஜனதா அரசு நடந்து வருவதற்கும் நான் உள்பட 17 பேர் தான் உதவி செய்தோம்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி வழங்க கூடாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 11 எம்.எல்.ஏ.க்களில் 8 பேருக்கு மட்டும் மந்திரி பதவி வழங்க பா.ஜனதா மேலிடம் முடிவு செய்து இருப்பது எனக்கு தெரியாது. நாங்கள் எடியூரப்பாவை நம்பி தான் வந்தோம். 17 பேருக்கும் மந்திரி பதவி கிடைக்காவிட்டால் ஏற்படும் பிரச்சினைகளை எடியூரப்பா தான் சரிசெய்ய வேண்டும்.

மங்களூரு கலவரம் தொடர்பாக குமாரசாமி வெளியிட்டு உள்ள வீடியோ காட்சிகள் அடங்கிய சி.டி.க்கள் முற்றிலும் போலியானது. கலவரம் நடந்து நீண்ட நாட்கள் கழித்து சி.டி.க்களை வெளியிட்டு உள்ளார். நான் ஒரு அரசியல்வாதி இருக்கிறேன் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவே அவர் சி.டி.க்களை வெளியிட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com