180 மருத்துவ குழுக்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவாரூர் மாவட்டத்தில் 180 மருத்துவ குழுக்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு பணியை அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
180 மருத்துவ குழுக்கள் மூலம் தொற்று நோய் தடுப்பு பணி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
Published on

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் தொற்றுநோயை தடுப்பதற்கு 180 மருத்துவ குழுவினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினரின் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மன்னார்குடி பஸ் நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது அமைச்சர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு கொசு மருந்து தெளிப்பு கருவிகளை வழங்கினர்.

இதுகுறித்து அமைச்சர் காமராஜ் கூறியதாவது:-

1 லட்சம் கான்கிரீட் வீடுகள்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்றுமுன்தினம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினார். அதேபோல மத்திய குழுவும் புயல் பாதிப்புகளை முழுமையாக பார்வையிட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் 1 லட்சம் கான்கீரிட் வீடுகள் கட்டித்தரப்படும் என்ற உத்தரவை முதல்-அமைச்சர் பிறப்பித்துள்ளார்.

மருத்துவ குழுக்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் ஏற்படாமல் மக்களை பாதுகாக்க சுகாதாரத்துறை சார்பில் 1 டாக்டர், 1 செவிலியர், 2 மருத்துவ உதவியாளர்கள் அடங்கிய 180 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல குடிநீர் தொட்டிகளில் குளோரினேசன் மேற்கொள்ள 50 குழுக்களும், கொசு, ஈக்களை ஒழிக்க 20 குழுக்களும் அமைக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருந்துவருகிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தால் 2 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இதில் ராதாகிருஷ்ணன் எம்.பி., திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் உமா, துணை இயக்குனர் ஸ்டேன்லி மைக்கேல், உள்ளிக்கோட்டை வட்டார மருத்துவ அதிகாரி மணவழகன், மன்னார்குடி நகராட்சி ஆணையர் விஸ்வநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com