மின்மோட்டார் பழுதால் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலையும் மாணவிகள்

சீர்பாதநல்லூர் அரசு பள்ளியில் மின்மோட்டார் பழுதால் மாணவிகள் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலைந்து திரிகின்றனர்.
மின்மோட்டார் பழுதால் குடிநீர் தேடி காலி குடங்களுடன் அலையும் மாணவிகள்
Published on

மூங்கில்துறைப்பட்டு,

பள்ளி மாணவ- மாணவிகள் கல்வி பயிலுவதற்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக விலையில்லா சீருடை, காலணிகள், நோட்டு-புத்தகம், சைக்கிள் உள்ளிட்டவற்றை வழங்கி பள்ளிக்கு வரும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. மேலும் பள்ளிக்கூடங்களில் சுகாதாரமான வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.

ஆனால் விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி பகுதியான சீர்பாதநல்லூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சீர்பாதநல்லூர். இங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்களின் தேவைக்காக பள்ளி வளாகத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அதில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணற்றில் இருந்து மினிகுடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதானது. அதனை சரிசெய்து தரக்கோரி ஆசிரியர்களும், அப்பகுதி மக்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் இதுவரை பள்ளிக்கூடத்தில் உள்ள மின்மோட்டார் சரி செய்யப்படவில்லை.

இதனால் பள்ளிக்கூடத்துக்கு வரும் மாணவ-மாணவிகள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர். ஒரு சில மாணவிகள் ஒன்று சேர்ந்து, தங்களது சொந்த செலவில் பிளாஸ்டிக் குடங்களை வாங்கி உள்ளனர். தினமும் பள்ளிக்கூடத்துக்கு வந்ததும் படிப்பதில்லை. மாறாக குடிநீரை தேடி கிராமத்தில் உள்ள குடிநீர் குழாய் களுக்கும், அருகில் உள்ள விளைநிலங்களுக்கும் காலி குடங்களுடன் அலைவதை காணமுடிகிறது.

தினமும் குடங்களில் குடிநீர் பிடித்து வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆவதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளி நேரத்தில் மாணவிகள் குடிநீர் தேடி அலைவதால் அவர்களின் படிப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது.

மேலும் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை வசதியும் இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், கடைகோடி பகுதியாக இருப்பதால் இந்த பள்ளிக் கூடத்தின் மீது அதிகாரிகளின் பார்வை விழவில்லை. இதனால் இந்த பள்ளியின் நிலை எப்போது மாறுமோ என்று மாணவர்கள் புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையே பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர் சேர்க்கையும் வெகுவாக குறைந்து வருகிறது. எனவே இனியாவது அதிகாரிகள் காலம் தாழ்த்தாமல் அந்த பள்ளிக்கூடத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com