சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை பெற சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு நிதி உதவி - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்
Published on

சிவகங்கை,

உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு வழங்கும் நிதியுதவியை பெற சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

சிறுபான்மையினர் குழந்தைகள் முறையான கல்வி பெறும் வகையில் வசதிகளை மேம்படுத்துவதற்காக சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. இதன்படி அரசு உதவி பெறும், உதவி பெறாத துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகிய சிறுபான்மையினர் நலப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையில் 75 சதவீதம் வரையிலும் அல்லது ரூ.50 லட்சத்துக்கு மிகாமலும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இந்த நிதி உதவியின் மூலம் வகுப்பறை, அறிவியல் கூடம், கழிப்பறை கட்டிடம், குடிநீர் வசதிகள், கணினி அறை மற்றும் பெண்கள் விடுதிகளுக்கான கட்டுமானப் பணிகள் ஆகியவை மேற்கொள்வதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிதியை பெறுவதற்கு சிறுபான்மையினரின் பள்ளிகள் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் வரை இயங்கி மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்களிடம் இருந்து அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் கீழ் 20 சதவீதம் சிறுபான்மையின மக்கள் வசிக்கும் நகரம், கிராமத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும்.

இது தொடர்பான விரிவான விவரங்களை இணைய தளம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சம்பந்தப்பட்ட தகுதி வாய்ந்த கல்வி நிறுவனங்கள் தங்களது கருத்துருவை தயார் செய்து அதை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் அனுப்பலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com