காஞ்சீபுரத்தில் சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கும் சிறப்பு முகாம்

சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கும் சிறப்பு முகாம் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 20-ந்தேதி நடக்கிறது என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்து உள்ளார்.
காஞ்சீபுரத்தில் சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கும் சிறப்பு முகாம்
Published on

காஞ்சீபுரம்,

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது.
தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர், பார்சிக்கள் மற்றும் ஜெயின் மதங்களை சேர்ந்தவர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் வியாபாரம் மற்றும் தொழில் செய்வதற்கு பல்வேறு கடன் உதவி திட்டங்களை தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(டாம்கோ) செயல்படுத்தி வருகிறது.

அதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடன்பெற தகுதியான சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. தனிநபர் கடன் திட்டம், வியாபாரம், தொழில் தொடங்கவும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடன் அளிக்கப்படுகிறது.

சில்லரை வியாபாரம், மரபு வழி சார்ந்த தொழில்கள், சேவை சார்ந்த தொழில் நிலையங்கள், இலகுரக போக்குவரத்து வாகன கடன், விவசாயம் தொடர்பான தொழில்கள் செய்ய கடன் வழங்கப்படுகிறது.

இவை தவிர மாணவர்களுக்கு கல்விக்கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறுகடன் என பல்வேறு நிலைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், பயனாளிகள் விண்ணப்பிக்கவும் வருகிற 20-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் தொடங்குகிறது.

கடனுதவி தேவைப்படும் சிறுபான்மையினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்களது சாதி சான்று, பள்ளி மாற்று சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் நகல், ஆதார் அட்டை மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கலாம். தகுதியான மனுக்கள் மீது கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும்.

இந்த சிறப்பு முகாமில் சிறுபான்மையினர் மக்கள் கலந்து கொண்டு பயனுள்ள வகையில் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com