சிறுபான்மை இன மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மை இன மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.
சிறுபான்மை இன மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங் களில் 2018-19-ம் கல்வியாண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ, ஐ.டி.சி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை,முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழில்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www. scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றன.

2018-19-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 33 ஆயிரத்து 404 மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கல்வி உதவித்தொகை மாணவ-மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 30-ந்தேதி வரையில் மேற்படி இணைய தளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் அனைவரும் இணைய தளத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ-மாணவிகளின் ஆதார் எண்களின் விவரம் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் அலுவலர்களுக்கு இணைய தளத்தால் பகிரப்படமாட்டாது. கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் புதிய கல்வி நிலையங்களை இணைப்பதற்கு குறியீட்டு எண் அவசியமாகும் என்பதால் புதிய கல்வி நிலையங்கள் இணைய தளத்தில் கல்வி நிலையத்தின் அடிப்படை விவரங்களை பதிவு செய்ய சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு தங்களுக்கான பயனாளர் குறியீட்டு விவரங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி நிலையங்கள் தங்களுடைய குறியீட்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். மேற்படி கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறைகள் பற்றிய விரிவான விளம்பரங்கள் www.bcmbcw.tn.gov.in என்ற மத்திய அரசின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com