மிஷன்வீதி - கடற்கரை சாலையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 250 கூடுகள்

புதுவையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 250 கூடுகள் வைக்கப்பட்டு வருகிறது.
மிஷன்வீதி - கடற்கரை சாலையில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க 250 கூடுகள்
Published on

புதுச்சேரி,

சிட்டுக்குருவி இனம் நாளுக்கு நாள் அழிந்து கொண்டே வருகிறது. சுற்றுச்சூழல் மாற்றங்கள், மரங்களை அழித்தல், செல்போன் கோபுரங்களில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கத்தால் சிட்டுக்குருவிகள் பாதிக்கப்படுகிறது. முன்பு கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் அதிக அளவில் காணப்படும். அதில் வந்து சிட்டுக் குருவிகள் தங்குவதற்கு கூடு கட்டும்.

ஆனால் தற்போது மனித நாகரிக வளர்ச்சியால் வானளாவிய கட்டிடங்கள் கட்டப்படுகிறது. சிட்டுக்குருவிகள் அதில் கூடு கட்ட இடம் கிடைப்பது இல்லை. குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களும் அழிக்கப்படுவதால் வசிப்பிடமின்றி சிட்டுக்குருவிகளை காண்பது அரிதாகி விட்டது.

இந்த நிலையில் புதுவையை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை மூலம் சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அவர்கள் சிட்டுக்குருவிகள் அதிகம் வாழும் இடங்களை கணக்கெடுத்து அந்த பகுதிகளில் கூடுகள் வைத்து, பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக புதுவை நகர பகுதிகளில் சிட்டுக்குருவிகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மிஷன்வீதி முதல் கடற்கரை சாலை வரை உள்ள பகுதிகளில் சிட்டுக்குருவிகள் அதிகமாக வசித்து வருவது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் 250 கூடுகள் வைக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த கூடுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கடற்கரை சாலையில் நடந்தது. நிகழ்ச்சியில் ராஜபாளையம் வன வாழ்க்கை அறக்கட்டளை நிறுவன செயலாளர் சுப்பிரமணியராஜா, பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் ராம் என்பவரிடம் கேட்டபோது, புதுவையில் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு லாஸ்பேட்டையில் எங்கள் அமைப்பின் சார்பில் 50 இடங்களில் கூடுகள் வைக்கப்பட்டன. தற்போது அவை அனைத்திலும் சிட்டுக்குருவிகள் வசித்து வருகின்றன. புதிதாக 250 கூடுகள் தயார் செய்து இதனை சிட்டுக்குருவிகள் அதிகம் வசிக்கும் இடங்களில் வைத்து வருகிறோம். இந்த கூடுகளிலும் சிட்டுக்குருவிகள் வந்து தங்கும் என்று நம்புகிறோம். வரும் காலத்தில் சிட்டுக்குருவிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் இந்த இனத்தை அழிவில் இருந்து காக்க முடியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com