

காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நகர மற்றும் ஒன்றிய தி.மு.க. சார்பில், காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சீ புரம் நகர தி.மு.க. செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, இந்த சாலை மறியல் நடந்தது.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகர், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநில நெசவாளரணி செயலாளர் அன்பழகன், தொழிலதிபர்கள் சரவணன், கணேஷ் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்ன காஞ்சீபுரம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
தி.மு.க. திருவள்ளூர் மாவட்ட பிரதிநிதி குப்பன் மற்றும் திரளான தி.மு.க. நிர்வாகிகள் திருவள்ளூர்-திருப்பதி நெடுஞ்சாலையான உழவர் சந்தை பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் ஆயில்மில் பகுதியில் திருவள்ளூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் பொன்.பாண்டியன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகளை போலீசார் கைது செய்து அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் நேற்று தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட 40 பேரை கவரைப்பேட்டை போலீசார் கைது செய்தனர். மேலும் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் அருகே ராகவரெட்டிமேடு ரமேஷ் தலைமையில் தி.மு.க.வினர் 20 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே திருத்தணி நகர தி.மு.க. செயலாளர் பூபதி தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கலந்து கொண்டு சாலையில் அமர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் எனவும், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் கோஷமிட்டனர்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருத்தணி மற்றும் அரக்கோணம் சாலைகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருத்தணி போலீசார் சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.