ராஜபக்சே கருத்து குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - அமைச்சர் சரோஜா பேச்சு

ஈழ தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா உதவியது என ராஜபக்சே தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த அ.தி.மு.க.பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சரோஜா பேசினார்.
ராஜபக்சே கருத்து குறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - அமைச்சர் சரோஜா பேச்சு
Published on

திருவண்ணாமலை,

ஈழ தமிழர்களுக்கு எதிராக நடந்த போரில் சிங்கள ராணுவத்திற்கு உதவிய தி.மு.க., காங்கிரசை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் அ.தி.மு.க.பொதுக்கூட்டம் நடந்தது. தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட பொருளாளர் நைனாக்கண்ணு, இணை செயலாளர் நளினி மனோகரன், துணை செயலாளர் துரை, நகர செயலாளர் ஜெ.செல்வம், திருவண்ணாமலை ஒன்றிய செயலாளர் குமாரசாமி, முன்னாள் நகரமன்ற தலைவர் பவன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் சரோஜா, திரைப்பட இயக்குனர் சுந்தர்ராஜன், விவசாயப் பிரிவு செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் சரோஜா பேசியதாவது:-

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு எதிராக நடந்த பேரில் சிங்கள ராணுவம் வெற்றி பெற இந்தியா உதவியதாகவும், ராணுவ தளவாடங்கள் வாங்க நிதியுதவி அளித்ததாகவும், சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் பயிற்சி அளித்ததன் காரணமாகவே போரில் வெற்ற பெற முடிந்தது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்து உள்ளார். அப்போது மத்தியில் தி.மு.க.அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி செய்தது.

எனவே இவர்களின் நிலை என்ன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக தான் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் பொதுகூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ராஜபக்சே தெரிவித்த கருத்து குறித்து தி.மு.க.அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு உதவியதா, இல்லையா என்று ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக மக்களுக்காக ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவரது வழியில் இப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அடுத்து வருவது பாராளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சி தேர்தலாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் தேர்தல் பணியில் சிறப்புடன் செயல்பட வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும். வாக்காளர் பட்டியலை சரியாக சரிபார்த்தாலே நாம் 75 சதவீதம் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசுகையில், இலங்கையில் 3 லட்சம் தமிழர்களை படுகொலை செய்ய இந்தியா உதவியதாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே தெரிவித்து உள்ளார். அப்போது தி.மு.க.அங்கம் வகித்த காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி செய்தது. மேலும் போர் நடந்த காலத்தில் இலங்கை சென்ற கனிமொழி எம்.பி. ராஜபக்சே உபசரிப்பை பெற்று இந்தியா திரும்பினார். தமிழர்கள் நலமாக இருப்பதாகவும் பேட்டி கொடுத்தார். தமிழ் மக்கள் அழிய இவர்களே காரணம் என்றார்.

கூட்டத்தில் வனரோஜா எம்.பி., மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நாராயணன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் பர்குணகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலியபெருமாள், மாவட்ட பேரவை துணை செயலாளர் முரளிமோகன், சித்த மருத்துவர் பழனி உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கலசபாக்கம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com