சென்னை மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்க சென்னை மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சீர் செய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், முதல்-அமைச்சர் கடந்த 7-ந்தேதியன்று பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறையின் சார்பில் பருவமழை காலத்தை முன்னிட்டு ஏற்படக் கூடிய தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் 200 வார்டுகளிலும் ஒரு வார்டுக்கு இரண்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் என மொத்தம் 400 சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் முதல் கட்டமாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனைத்தொடர்ந்து மழைக்கால நோய்களில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகளின் சார்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்களை தொடங்கி வைக்கும் விதமாக சென்னை தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக தொழிற் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், த.வேலு எம்.எல்.ஏ., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச்செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com