கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்

கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை கொளத்தூர் பகுதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார்.
கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதிகளை பார்வையிட்ட மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழகத்தில் கனமழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கனமழை தொடங்கிய நாளில் இருந்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் சென்னை கொளத்தூர் திரு.வி.க. மண்டலத்தைச் சேர்ந்த சபாபதி தெருவில் கடந்த மாதம் 23-ந் தேதி வீட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயலட்சுமி, சுதா மற்றும் மோகனா ஆகியோரின் இல்லத்துக்கு ஸ்டாலின் நேற்று நேரில் சென்று நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினார்.

மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

தொடர்ந்து வள்ளியம்மை தெருவில் பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். மேலும் அப்பகுதி மக்களின் கோரிக்கையின்படி, கழிவுநீர் பிரச்சினையை சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், ஜி.கே.எம். காலனி 11-வது தெருவில் பொதுமக்களை சந்தித்து தேவைகளை கேட்டறிந்தார். சிவ இளங்கோ சாலையில் உள்ள வண்ணான்குட்டையை பார்வையிட்டு, குட்டையில் கழிவுநீர் கலக்காமல் இருக்கவும், அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் வெளியேற்றவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நிவாரண பொருட்கள் வழங்கினார்

அதையடுத்து கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் விஜயராஜ்குமார் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com