எம்.எல்.ஏ., வக்கீல் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல்: திடீர் பதற்றம்; போலீஸ் குவிப்பு

புதுவை முதலியார்பேட்டையில் எம்.எல்.ஏ. மற்றும் வக்கீல் ஆதரவாளர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்டனர். இதனால் திடீர் பதற்றத்தையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
எம்.எல்.ஏ., வக்கீல் ஆதரவாளர்கள் கோஷ்டி மோதல்: திடீர் பதற்றம்; போலீஸ் குவிப்பு
Published on

புதுச்சேரி,

புதுவை முதலியார்பேட்டை வெள்ளாழ வீதியில் கலாம் சேவை மைய அலுவலகம் உள்ளது. இதன் நிறுவனராக வக்கீல் சம்பத் உள்ளார். அவரது அலுவலகத்தின் அருகில் உள்ள சுவரில் தொகுதி எம்.எல்.ஏ. பாஸ்கரின் ஆதரவாளர்கள் பிறந்தநாள் விளம்பர போஸ்டர் ஒட்டியதாக தெரிகிறது. அதை வக்கீல் சம்பத்தின் ஆதரவாளர்கள் அகற்றினர்.

இதுபற்றி தெரியவந்ததும் பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அங்கு வந்து தட்டிக் கேட்டனர். இதையொட்டி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து அவர்கள் தடி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று வக்கீல் சம்பத் புகார் செய்தார். இதற்கிடையே பாஸ்கர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் வக்கீல் சம்பத்தின் அலுவலகத்திற்குள் அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். அங்கிருந்த வக்கீல் சம்பத்தின் ஆதரவாளர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு திடீரென பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டனர். இருதரப்பினரையும் அழைத்து சமரசம் செய்தனர்.

இந்தநிலையில் தனது அலுவலகம் சூறையாடியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தை ஆதரவாளர்களுடன் வக்கீல் சம்பத் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அவரை போலீசார் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

எம்.எல்.ஏ., வக்கீல் ஆதரவாளர்கள் கோஷ்டிகளாக மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டதையொட்டி அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க முதலியார்பேட்டையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com