ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவட்ட வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை

ஆந்திராவில் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை செய்யப்பட்டதின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆந்திராவில் எம்.எல்.ஏ. சுட்டுக்கொலை: மாவட்ட வனப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை
Published on

கிருஷ்ணகிரி,

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதியில் மலைவாழ் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். அங்கு நிலக்கரி எடுப்பதற்கு மாவோயிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அரக்கு தொகுதி, தும்ரிகூடா மண்டலம், துடங்கி கிராமத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரிசோமா ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் கலந்து கொண்டனர்.

பின்னர், காரில் அரக்கிற்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சிலர் காரை வழிமறித்தனர். அந்த நேரம் காரில் இருந்து இறங்கிய எம்.எல்.ஏ சர்வேஸ்வரராவ், முன்னாள் எம்.எல்.ஏ. சிவேரி சோமா ஆகியோரை சிலர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.எல்.ஏ. உள்பட 2 பேரை சுட்டுக்கொலை செய்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தமிழகம் வர வாய்ப்பு உள்ளது என்பதால் ஆந்திர மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதியிலும், சோதனை சாவடியிலும் போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி, கும்ளாபுரம், அந்திவாடி, பாகலூர், கக்கனூர், நேரலகிரி, வேப்பனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, வரமலைகுண்டா ஆகிய 9 சோதனைச்சாவடியிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் ஆந்திர மாநில எல்லையில் உள்ள வனப்பகுதிகளான வரமலைகுண்டா, ஒப்பதவாடி, மூலக்கொல்லை, துரைஏரி, காளிக்கோவில், புங்குருத்தி, மகராஜகடை, ஏக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வாசுதேவன், ராஜீ மற்றும் 13 போலீசார் எந்திர துப்பாக்கிகளுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகத்திற்கு உரிய நபர்கள் யாரேனும் சுற்றினால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com