எம்.எல்.ஏ.வருகைக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

புதிய மேம்பாலம் கட்டுவதற்காக நடந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்க எம்.எல்.ஏ.வுக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ.வருகைக்கு அமைச்சரின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
Published on

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது மேல் குமாரமங்கலம் கிராமம். இது கடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், அ.தி.மு.க. அமைச்சருமான எம்.சி.சம்பத்தின் சொந்த கிராமமாகும்.

இந்த கிராமத்தையும், விழுப்புரம் மாவட்டம் ராம்பாக்கம் கிராம பகுதியையும் இணைக்கும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.25 கோடியே 94 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று, பாலம் கட்டுமான பணியை தொடங்கிடும் வகையில் பூமி பூஜை நடைபெறுவதாகவும், இதில் பண்ருட்டி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட இருப்பதாகவும் விளம்பர பதாகைகள் கிராமத்தில் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தென்பெண்ணை ஆற்றில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகளையும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த அமைச்சர் எம்.சி.சம்பத்தின் ஆதரவாளர்கள் ஆற்று பகுதிக்கு ஒன்று திரண்டு சென்றனர். அங்கு ஆற்றின் உள்ளே செல்லும் பாதையின் குறுக்கே அமர்ந்து திடீரென அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை பூமி பூஜை விழாவில் பங்கேற்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதையறிந்த சத்யா பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் அ.தி.மு.க.வினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி, பதற்றமான நிலை நீடித்தது.

இதுபற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேதரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது அங்கிருந்த அமைச்சரின் ஆதரவாளர்களான அ.தி. மு.க. ஒன்றிய செயலாளர் கந்தன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமசாமி, அண்ணா கிராம ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் சம்பந்தம் ஆகியோரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் இந்த பாலம் கட்டும் பணிக்கு கடந்த 1 மாதத்திற்கு முன்பே பூமி பூஜை போடப்பட்டு விட்டது. எனவே தற்போது இந்த நிகழ்ச்சி தேவையற்றது. மேலும் இந்த பகுதிக்கு சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வருவது பற்றி எந்த ஒரு தகவலும் கட்சி பிரமுகர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

மேலும் இந்த விழா நடைபெறுவது குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு எந்த ஒரு அழைப்பும் கொடுக்கவில்லை. அதோடு அவரை இங்கு வரவேற்று வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளில் அமைச்சரின் பெயரோ, படமோ போடாமல் வைத்து இருக்கிறார்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து, சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் இங்கு பூமி பூஜை நடத்தப்பட வேண்டும் என்றார்கள்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அங்கு வரவில்லை என்று தெரிவித்தார். இதன்காரணமாக அங்கிருந்த எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளே பூமி பூஜையை நடத்தி மேம்பால பணியை தொடங்கி வைத்தார்கள்.

இதுபற்றி அறிந்தவுடன் அமைச்சரின் ஆதரவாளர்கள் ஆற்றுப்பகுதிக்கு சென்று பூமி பூஜையை தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் பின்னர் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

மேல்குமாரமங்கலத்தில் பூமி பூஜையில் பங்கேற்க வர இருந்த சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.வை வரவேற்று அவரது ஆதரவாளர்கள் விளம்பர பதாகைகள் வைத்திருந்தனர். அதேபோல் இங்கு பாலம் கட்டுவதற்கு 1 மாதத்திற்கு முன்பு பூமிபூஜை நடத்தப்பட்டு, மேம்பால பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர் எம்.சி.சம்பத்திற்கு நன்றி என்று தெரிவித்து அவரது ஆதரவாளர்களும் விளம்பர பதாகைகளை நேற்று கிராமத்தில் வைத்தனர். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com