விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க வேண்டும்

விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும் என்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் தெய்வசிகாமணி கூறினார்.
விவசாயிகளின் வங்கிக்கடன்களை ரத்து செய்ய சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுக்க வேண்டும்
Published on

ஈரோடு,

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காததாலும், அரசின் விவசாய விரோத கொள்கைகளாலும், இயற்கை பாதிப்பினாலும் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வாழ்க்கையே போராட்டமாக மாறிவிட்டது.

கடன் சுமை


கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு சம்பா சாகுபடியும் செய்யப்படவில்லை. மானாவாரி விவசாயமும் அழிந்து விட்டது. தென்னை மரங்கள் காய்ந்து போய் விட்டன. விவசாய நிலங்கள் பொட்டல் காடுகளாக மாறிவிட்டன. தண்ணீர் 1,500 அடிக்கும் கீழ் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. விவசாயம் வீழ்ச்சி அடைந்ததால் வருவாய் இல்லாத நிலை, வங்கிகளில் வைத்த நகைகளும், சொத்துகளும் ஏலத்துக்கு சென்று விட்டன. வணிக வங்கிகளில் பெற்ற கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை. கடன் சுமை அதிகரித்து வருகிறது.

விவசாயிகள் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியாலும் உயிரை மாய்த்து விட்டனர். கால்நடைகளுக்கான தீவனம் மட்டுமின்றி தீவனம் வெட்டும் எந்திரங்களும் பல மடங்கு விலை உயர்ந்து விட்டன. மத்திய அரசு முழுமையாக தமிழக மக்களுக்கு விரோதமாகவே செயல்படுகிறது.

எம்.எல்.ஏ.க்களுக்கு கோரிக்கை


விவசாயிகள் வணிக வங்கிகளில் பெற்ற கடன்களை ரத்து செய்ய எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் குரல் கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசை எம்.எல்.ஏ.க்கள் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். இதை விவசாயிகள் சார்பாக எம்.எல்.ஏ.க்களுக்கு கோரிக்கையாக வைக்கிறேன்.

மஞ்சள் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் தமிழக அரசு குறைந்த பட்ச விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும்.

மருத்துவ முகாம்


வருகிற ஜூலை 16ந் தேதி பவளத்தான்பாளையம் ஏ.ஈ.டி. பள்ளிக்கூடத்தில் மூட்டு எலும்பு, இருதயம், டயாலிசிஸ், கண், கர்ப்பப்பை தொடர்பான இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் சிகிச்சைக்கு தேர்ந்து எடுக்கப்படுபவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை அனைத்து செலவுகளையும் முற்றிலும் இலவசமாக செய்கிறது.

இவ்வாறு தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com