மணல் கடத்திய கும்பல் தப்பி ஓட்டம்; 42 மூட்டை பறிமுதல் - கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

அம்மாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திய கும்பல் அதிகாரிகளை கண்டதும் தப்பி ஓடியது. மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மணல் கடத்திய கும்பல் தப்பி ஓட்டம்; 42 மூட்டை பறிமுதல் - கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
Published on

அம்மாபேட்டை,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறப்பு படிப் படியாக குறைக்கப்பட் டது. நேற்று காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிநீர் வந்தது. வெள்ளப்பெருக்கின் காரணமாக காவிரி ஆற்றில் ஆங்காங்கே ஏராளமான மணல் திட்டுகள் காணப்படுகிறது.

குறிப்பாக ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை, காடப்பநல்லூர், கோவில்பாளையம், சின்னப்பள்ளம் ஆகிய பகுதிகள் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்து உள்ளதால் பட்டப்பகலில் மணல் கடத்தல் நடக்கிறது.

நேற்று அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் ஜமுனாதேவி, கிராம நிர்வாக அதிகாரி சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோர பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது ஆற்றின் கரையோரத்தில் மர்ம கும்பல் ஒன்று சாக்கு மூட்டைகளில் மணலை கடத்தி கொண்டிருந்தது.

அதிகாரிகள் வருவதை கண்டதும் அந்த கும்பல், மணல் மூட்டைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றது. அப்போது ஆற்றின் கரையில் 42 மணல் மூட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆற்றில் குவித்து வைக்கப்பட்ட மணல் குவியல்களையும் அதிகாரிகள் அகற்றினார்கள். பின்னர் அங்கிருந்த 42 மணல் மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து அம்மாபேட்டை வருவாய் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அம்மாபேட்டை பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் மணல் அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் மர்ம கும்பல் மணல் கடத்தலில் ஈடுபடுகிறது. இதன் மூலம் இயற்கை வளம் குறைவதோடு, ஆற்றில் ஏராளமான குழிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே வருவாய்த்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து காவிரி ஆற்றில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com