

சிவகங்கை,
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நரம்பியல் பிரிவில் வலிப்பு நோய் கண்டறியும் நவீன எந்திரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தை மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குழந்தைவேல் தொடங்கி வைத்தார். விழாவில் நரம்பியல் துறை டாக்டர் ராமு, துணை முதல்வர் சர்மிளா திலகவதி, குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் சிவக்குமார், இருதய நோய் பிரிவு டாக்டர் சங்கர், கண்காணிப்பாளர் ஷீலா, துணை மருத்துவ அலுவலர் முகமது ரபீக், பேராசிரியர் பீர் முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் டீன் குழந்தைவேல் கூறியதாவது:-
இதய நோய்களை கண்டறிய இ.சி.ஜி. கருவி இருப்பது போல் நரம்பியல் தொடர்பான பாதிப்புகளில் வலிப்பு நோய் தன்மை குறித்து கண்டறிய இ.இ.ஜி. என்ற கருவி உள்ளது. இந்த கருவி இதுவரை சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிடையாது. இந்த நோய் தொடர்பாக பரிசோதனை செய்ய மதுரை அரசு மருத்துவமனைக்கு தான் நோயாளிகளை அனுப்பி வந்தனர். இனி இந்த பரிசோதனையை சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே செய்து கொள்ளலாம்.
முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இந்த கருவி வாங்கப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் ஒரு நாளைக்கு 10 பேருக்கு பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனை மூலம் வலிப்பு நோய் பாதிப்பு உள்ளதா என்றும், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்துள்ளார்களா என்பதையும் அறியலாம்.
இந்த கருவி மூலம் பரிசோதனை செய்ய ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வரை ஆகும். தற்போது சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.