குற்றவாளிகளை கண்காணிக்க: கோர்ட்டு-கலெக்டர் அலுவலகத்தில் கேமரா பொருத்த முடிவு

குற்றவாளிகளை கண்காணிக்க திண்டுக்கல் கோர்ட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை கண்காணிக்க: கோர்ட்டு-கலெக்டர் அலுவலகத்தில் கேமரா பொருத்த முடிவு
Published on

திண்டுக்கல்,

குற்றவாளிகளை கண்டறிய போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக உள்ளன. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் காட்சிகளை வைத்து போலீசார் மிக விரைவாக குற்றவாளிகளை பிடித்துவிடுகின்றனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராக வரும் விசாரணை கைதிகள் சிலரை தீர்த்துக்கட்ட திட்டம்போடுவதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், வாரந்தோறும் திங்கட்கிழமை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வருபவர்களில் சிலர் தீக்குளிக்க முயல்வதும் நடக்கிறது. இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது:-

திண்டுக்கல் நகரில் 124 கேமராக்கள், பழனியில் 100 கேமராக்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகள் போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், வணிக வளாகங்கள், நகைக்கடைகளில் அதன் உரிமையாளர்களே கேமராக்களை பொருத்த அறிவுறுத்தி உள்ளோம்.

கொலை சம்பவங்களில் குற்றவாளிகளை பிடித்து விசாரிக்கும்போது, அவர்களுக்கு பிடிக்காதவர்களையும் வழக்கில் சிக்க வைக்க பொய் சொல்கின்றனர். இதனால், சம்பந்தமே இல்லாதவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆனால், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தால் உண்மை குற்றவாளிகளை துல்லியமாக அடையாளம் காண முடிகிறது.

எனவே, குற்றவாளிகளை கண்காணிக்க திண்டுக்கல் கோர்ட்டுக்கு வெளியே உள்ள சாலைகள், கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தும் இடங்களான வேடசந்தூர் ஆத்துமேடு, அம்பேத்கர் சிலை, வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் உள்பட முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடங்களிலும் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com