ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நெல்லையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது. இதனால் நெல்லையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதன் காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நெல்லையில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன
Published on

நெல்லை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் வெளியே வர வேண்டும். மற்ற காரணங்களுக்கு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கில் தளர்வு கொண்டு வரப்பட்டது. அதன்படி அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப் பட்டது. டீக்கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), கட்டுமான பொருட்கள் கடைகள், ஹார்டுவேர், மின்சாதன கடைகள், பழுது நீக்கும் கடைகள், மொபைல் போன் விற்பனை செய்யும் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மிக்சி, கிரைண்டர் விற்பனை செய்யும் கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

48 நாட்களுக்கு பிறகு கடைகள் நேற்று திறக்கப்பட்டன. நெல்லை, மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மண்டலங்களில் உள்ள டீக்கடைகளை காலை 5 மணி முதல் திறக்க தொடங்கினர். கடைகளுக்கு முன்பு சமூக இடைவெளியை குறிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டு இருந்தது. அதில் நின்று பொதுமக்கள் பார்சல் டீ வாங்கி சென்றனர்.

நெல்லை டவுன் ரத வீதிகளில் தள்ளுவண்டிகளில் கொய்யாப்பழம், மாம்பழம் உள்ளிட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. சிறிய துணி கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் மக்கள் ஆர்வமாக துணிகளை வாங்கினர். மேலும் ஜெராக்ஸ், பெயிண்ட், மரக்கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகளும் திறக்கப்பட்டன. நெல்லையப்பர் கோவில் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை டவுன் ரதவீதியில் உள்ள நகைக்கடைகளும் நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

ரதவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானவர்கள் வந்தனர். அதனால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல் பாளையங்கோட்டை பகுதியிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நெல்லை ஈரடுக்கு மேம்பாலம், நெல்லை டவுன் ரதவீதி, பாளையங்கோட்டை முருகன்குறிச்சி சாலைகளில் அதிக அளவு வாகனங்கள் சென்றன. மேலப்பாளையம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டது.

அனைத்து கடைகளிலும் பணிபுரியும் பணியாளர்கள் முக கவசம் அணிந்து வாடிக்கையாளர்களை வரவேற்றனர். தனி நபர் இடைவெளி பின்பற்றப்படுகிறதா? என மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். கடைகள் முன்பு கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

அனைத்து கடைகளும் இரவு 7 மணி வரை திறந்து இருந்தது. இதன் காரணமாக நெல்லையில் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com