

சுற்றுச்சுவர் கட்டும் பணி
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது ஸ்தலமாகும். இந்த கோவிலில் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு தடையாக இருந்த சிறிய மரங்கள் சில அகற்றப்பட்டன. சுற்றுச்சுவர் அமைப்பதற்கு இடையூறாக இல்லாத வேப்பமரம், புங்கமரம், அரசமரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் கோவில் வளாகத்தில் வெட்டி அகற்றப்பட்டன. கோவில் சுற்றுச்சுவர் அமைப்பதற்கும், இந்த மரங்கள் உள்ள இடங்களுக்கும் எந்த சம்மந்தமும்
இல்லை என்றும், இவை எந்த அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளன என்று பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் பலர் கோடை காலத்தில் இந்த மரத்தடி நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்துவிட்டு செல்வது வழக்கம். கோவிலுக்கு பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களும் இந்த மரத்தடி நிழலில் நிறுத்தப்படுவது வழக்கம்.
பக்தர்கள் புகார்
கோவிலுக்கு வந்த பக்தர்கள் பலர் சுற்றுச்சுவர் அமைப்பதற்கு சம்பந்தமே இல்லாத கோவில் முகப்பு வளாக பகுதியில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் நிர்வாகத்தின் மெத்தனப்போக்கால் இந்த பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், மரங்களை அகற்றாமல் இந்த சுற்றுச்சுவர் பணிகளை தொடங்கியிருக்கலாம் என்று கூறி இதற்கு காரணமான கோவில் பணியாளர்கள் மீதும், மரத்தை அகற்றிய ஒப்பந்த பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி வனத்துறை மற்றும் அறநிலையத்துறை, பசுமை தீர்ப்பாய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் செய்துள்ளனர்.பழமை வாய்ந்த மரங்கள் அகற்றப்பட்ட சம்பவத்தால் உள்ளூர் மக்கள் எதிர்ப்பால் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது உள்ள மரங்களுக்கு இடையே
கூடுதலாக மரங்கள் வளர்க்க வேண்டும் எனபதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகையின் நினைவாக வைக்கப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் பராமரிப்பின்றி காய்ந்து விட்டன.
அதிகாரிகள் ஆய்வு
இந்த நிலையில் கோவில் வளாகத்தில் மரம் வெட்டப்பட்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் தங்களது அனுமதி பெறாமல் எப்படி மரங்கள்
வெட்டப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்ய மாமல்லபுரம் வருவாய் அலுவலர் ஜேம்ஸ், மாமல்லபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் தலசயன பெருமாள் கோவில் வளாகத்திற்கு நேரில் சென்று வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டனர். பிறகு கோவில் நிர்வாக அதிகாரியிடம் தங்களது அனுமதி இல்லாமல் எப்படி மரங்களை வெட்டலாம்.சுற்றுச்சுவர் அமைப்பதற்கு பாதிப்பில்லாத மரங்கள் ஏன் வெட்டப்பட்டன? என்பது குறித்து எழுத்து மூலம் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.