

திருவெண்காடு,
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே வானகிரி கிராமம் மீனவர் தெருவில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐஸ் விற்பனை செய்தனர்.
தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஐஸ் வாங்கி சாப்பிட்டனர். ஐஸ் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சிறுவர், சிறுமிகளுக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதில் வானகிரி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி(12), விவேக்(3), மித்ரன்(3), கவிதா(5), நித்தியஸ்ரீ(4), கீழமூவர்க்கரையை சேர்ந்த தர்ஷன்(8), பூம்புகாரை சேர்ந்த கனிஷ்கா(6), பவித்ரன்(4), வெள்ளக்கோவில் கிராமத்தை சேர்ந்த சர்மிளா(5) உள்ளிட்ட 22 பேருக்கு சீர்காழி அரசு தலைமை மருத்துவர் டாக்டர் தேவலதா தலைமையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதி உள்ள 85-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் வானகிரி பகுதியில் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள், காலாவதியான ஐஸ்சை விற்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.