வாடகை தருவதாக கூறி அடமானம்: ரூ.1 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் மீட்பு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரப்பகுதிகளில் அதிக வாடகை தருவதாக கூறி அடமானம் வைத்த ரூ.1½ கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் மீட்க்கப்பட்டன. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடகை தருவதாக கூறி அடமானம்: ரூ.1 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் மீட்பு தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Published on

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சிலர், கார் உரிமையாளர்களை சந்தித்து சினிமா படப்பிடிப்பு மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வாடகைக்கு கார்கள் தேவைப்படுவதாகவும், கார்களுக்கு நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூ.3 ஆயிரம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினர்.

இதை நம்பி ஊத்துக்கோட்டை, பென்னாலூர்பேட்டை பகுதிகளை சேர்ந்த கார் உரிமையாளர்கள் 19 பேர், அந்த நபர்களிடம் வாடகைக்கு கார்களை கொடுத்துள்ளனர். இந்த நிலையில், கார்களை வாடகைக்கு எடுத்த நபர்கள், கார் உரிமையாளர்களின் வங்கி கணக்குக்கு நாள் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் இரண்டு மாதம் வரை செலுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கார் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் திடீரென பணம் வராததால் கார்களை வாடகைக்கு எடுத்து சென்றவர்களை தேடினர். ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கார் உரிமையாளர்கள் ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலுர்பேட்டை போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில், கார் திருடர்களை பிடிக்க வடக்கு மண்டல போலீஸ் ஜ.ஜி.நாகராஜன், டி.ஜ.ஜி. தேன்மொழி ஆகியோரின் உத்தரவின்பேரில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மேற்பார்வையில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, அழகேசன் மற்றும் போலீசார் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், கார்களை வாடகைக்கு எடுத்து சென்றவர்கள் கார்களை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் நேற்று ஊத்துக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாசிலை அருகே சந்தேகம்படும்படி நின்ற 3 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்நகர் காந்தி தெருவை சேர்ந்த பிரவீன்ஜார்ஜ் (வயது 29), பூண்டி அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (36), ஊத்துக்கோட்டை அடுத்து உள்ள நந்திமங்கலம் கிராமத்தை சேர்ந்த பரத் (23) என்பதும், கார்களை வாடகைக்கு எடுத்து தலைமறைவானவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்படி சென்னை மற்றும் இதர பகுதிகளிலிருந்து அடமானம் வைக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 19 சொகுசு கார்கள் மீட்கப்பட்டது. அதன் பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com