குமரியில் 487 பள்ளிகளில் கருத்துக்கேட்பு பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்

10, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து குமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குமரியில் 487 பள்ளிகளில் கருத்துக்கேட்பு பெரும்பாலானவர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்
Published on

நாகர்கோவில்,

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் இருந்து பள்ளிக்கூடம் மூடப்பட்டுள்ளது. அதே சமயம் மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்காத வகையில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே நோய் தாக்கம் சற்று குறைந்ததை தொடர்ந்து நவம்பர் மாதம் பள்ளிகளை திறக்கலாமா? என்று கருத்து கேட்கப்பட்டது.

ஆனால் அப்போது பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கூறினர். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை திறப்பதாக எடுக்கப்பட்ட முடிவு மாற்றப்பட்டது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.

487 பள்ளிகள்

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று 487 பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. அதாவது 134 அரசு பள்ளிகள், 89 அரசு உதவி பெறும் பள்ளிகள், 218 மெட்ரிக் பள்ளிகள், 45 சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும், ஒரு மத்திய அரசு பள்ளியிலும் என மொத்தம் 487 பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

அந்த வகையில் மொத்தம் 49 ஆயிரத்து 92 மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) முருகன் முன்னிலையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளிகளிலும் கருத்துகளை தெரிவிக்க வந்த பெற்றோருக்கு கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் கொடுக்கப்பட்டது. பின்னர் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு தான் பள்ளிகளுக்குள் பெற்றோர் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு, தங்களது கருத்துகளை எழுதுவதற்காக காகிதம் கொடுக்கப்பட்டது. அந்த காகிதத்தில் அவர்கள் கருத்துகளை எழுதி அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

பள்ளிகளை திறக்க...

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில் பெற்றோர் கருத்துக்கேட்பு கூட்டம் 487 பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். கருத்துக்கேட்பு முடிந்ததும் அதுதொடர்பான அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com