

ஆவடி,
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு மண்ணொளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுணா (வயது 49). இவரது மகன் கமலக்கண்ணன் (27). மகள் ரோஜா என்கிற குமாரி (25). கமலக்கண்ணன், ரோஜா இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. கமலக்கண்ணன் பால் வியாபாரம் செய்து வருகிறார். சுகுணா தன் வீட்டில் மாடுகளை வைத்து வளர்த்து வந்தார். தினந்தோறும் அவர் தன்னுடைய மகள் ரோஜாவுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கமலக்கண்ணன் வழக்கம் போல பால் வியாபாரத்திற்கு சென்று விட்டார். சுகுணா தன்னுடைய மகள் ரோஜாவுடன் மாடுகளை மேய்ச்சலுக்காக திருநின்றவூர் ஏரிக்கு ஓட்டி சென்றார். இரவு வீட்டுக்கு வந்த கமலக்கண்ணன் தன்னுடைய தாய் மற்றும் தங்கை வீட்டுக்கு வராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களில் தேடினார். இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
தாய், மகள் சாவு
இதைத்தொடர்ந்து நேற்று காலை கமலக்கண்ணன் திருநின்றவூர் ஏரிக்கு சென்று தன் தாய், தங்கை மற்றும் அவர்கள் ஓட்டிச் சென்ற மாடுகளை தேடினார். ஏரியின் ஒரு பகுதியில் தன்னுடைய தாய் மற்றும் தங்கை கொண்டு சென்ற கைப்பை மற்றும் குடைகள் ஏரியின் கரையில் இருப்பதை கண்டு அவர்களை தேடினார். அப்போது தாயும், தங்கையும் ஏரியின் வெவ்வேறு பகுதியில் பிணமாக மிதப்பதை கண்டு அழுது புலம்பினார்.
இது குறித்து திருவூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து ஏரியில் மூழ்கி இறந்த சுகுணா, ரோஜா ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் மூழ்கி தாயும், மகளும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.