குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார்.
குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவருடைய மனைவி திவ்யலட்சுமி (வயது 33). இவர்களது மகள் சாலிக்யா(4). கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பால் தாமோதரன் இறந்தார். இதனால் மிகவும் மனவேதனையில் இருந்த திவ்யலட்சுமி, அவ்வப்போது கதறி அழுது கொண்டிருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர்.

இருப்பினும் அவர் தனது கணவரை மறக்க முடியாமல் தவித்து வந்ததாக தெரிகிறது.

குழந்தையுடன் தற்கொலை

இந்த நிலையில் கணவர் இல்லாத விரக்தியில் திவ்யலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மேலும் தான் இறந்து விட்டால் மகள் கஷ்டப்படுவாள் என்பதால், மகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவர் தனது மாமியார் லலிதா என்பவரை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு, மகள் சாலிக்யாவை மட்டும் அழைத்து கொண்டு வெளியே வந்தார்.

பின்னர் அவர் வீட்டின் அருகில் இருந்த அன்பரசன் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்துக்கு சென்றார். அங்கு அவர் தனது மனதை கல்லாக்கிக் கொண்டு மகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே லலிதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டில் இருந்து வெளியே வந்து, திவ்யலட்சுமியையும், சாலிக்யாவையும் தேடினார்.

போலீசார் விசாரணை

அப்போது திவ்யலட்சுமியும், சாலிக்யாவும் கிணற்றில் பிணமாக மிதந்ததை கண்டு கதறி அழுதார். இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திவ்யலட்சுமி, சாலிக்யா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து திவ்யலட்சுமி ஏற்கனவே வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எனது கணவர் இல்லாத உலகில் என்னால் வாழமுடியவில்லை. எனவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று கூறப்பட்டு இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் இறந்த துக்கத்தில் மகளுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com