மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. பிரமுகர் பலி தனியார் நிறுவன ஊழியர் கைது

சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க. பிரமுகர் மோட்டார் சைக்கிள் மோதி பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி தி.மு.க. பிரமுகர் பலி தனியார் நிறுவன ஊழியர் கைது
Published on

சென்னை,

சென்னை ராயப்பேட்டை பெசன்ட் தெருவை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (வயது 72). மாநில தி.மு.க. சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளராக இருந்து வந்தார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அன்னாரது நினைவிடத்தில் தி.மு.க. சார்பில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையொட்டி அமைதி ஊர்வலமும் நடந்தது.

இதற்காக சேப்பாக்கம் வாலாஜா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக வீட்டில் இருந்து காஜாமொய்தீன் வாகனத்தில் வந்தார். வாலாஜா சாலை சந்திப்பில் வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையை கடக்க முயன்றார்.

மோட்டார் சைக்கிள் மோதி பலி

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் சாலையில் நிலைதடுமாறி காஜா மொய்தீன் கிழே விழுந்தார். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரும் லேசான காயம் அடைந்தார்.

இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த காஜா மொய்தீனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

கைது

காஜா மொய்தீன் உயிரிழந்த தகவல் அறிந்து, சிகிச்சை பெற்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபர் நைசாக மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து தொடர்பாக அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோட்டார் சைக்கிள் எண் மூலம் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிய நபரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சதீஷ்குமார்(25) என்பது தெரிய வந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

நடிகர் சங்கம் இரங்கல்

விபத்தில் பலியான காஜா மொய்தீன் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நியமன செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com