

நெல்லை,
நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பாதாள சாக்கடை திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக நெல்லை மாநகரில் உள்ள சாலைகளில் தோண்டி குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கும் பணிகள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அவ்வாறு குழாய்கள் பதிக்கப்பட்ட இடங்களில் மண் கொண்டு மூடப்பட்டு, சாலை மேடும் பள்ளமுமாக காட்சி அளித்தது. அந்த மண் உறுதித்தன்மை அடைந்த பிறகே தார் சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
சகதியாக மாறிய சாலைகள்
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக, குழாய்கள் பதிக்கப்பட்ட பகுதியில் மண் உள்ளே இறங்கி பள்ளங்கள் உருவாகி இருக்கிறது. மேலும் மழைநீருடன் மண் கலந்து சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
குறிப்பாக டவுன் தொண்டர் சன்னதி பகுதி, நயினார்குளம்-தச்சநல்லூர் ரோடு, ஆர்ச் இணைப்பு சாலை, தெற்கு மவுண்ட் ரோடு, சந்திப்பு மதுரை ரோடு, ரெயில் நிலையம் செல்லும் த.மு.ரோடு உள்ளிட்ட சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
பள்ளத்தில் சிக்கிய வேன்
நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட் வழியாக தச்சநல்லூருக்கு செல்லும் குளக்கரை ரோடு சேறும், சகதியுமாக மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. அந்த வழியாக சென்ற ஒரு சரக்கு வேன் அங்குள்ள பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேனை கிரேன் உதவியுடன் மீட்டனர்.