100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் 100 சதவீத மானியத்தில் பண்ணைகுட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; காரைக்கால் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தல்
Published on

காரைக்கால்,

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், மாதம் தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார். நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது;-

தமிழகத்தில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதனை 20 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்க மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை மற்றும் காவிரி நீர் வருகைக்கு முன்பாக, காரைக்காலில் ஏராளமான குளம், ஏரி, வடிகால் வாய்க்கால்களை தூர்வாரிய மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றியினை கூறிக்கொள்கிறோம்.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களையும், ஏரிகளையும், வாய்க்கால்களையும் உடனடியாக அரசு செலவில் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்கால் மாதூர் மற்றும் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் உள்ள விதை நெல்கள் போதுமானதாக இல்லை. எனவே கூடுதல் விதை நெல்லை இருப்பு வைத்திருக்க மாவட்ட வேளாண்துறை முன்வரவேண்டும்.

கஜா புயலில் சேதமான ஆற்றின் கரைகளை சரி செய்யவேண்டும். பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கவேண்டும். காரைக்கால் நல்லெழுந்தூர் மற்றும் பத்த குடி வாய்க்கால்களை உடனடியாக தூர்வார பொதுப்பணித்துறை முன்வரவேண்டும். அங்குள்ள வாய்க்கால்களில் 500 மீட்டர் அளவிற்கு ஆகாயத்தாமரைகள் மண்டி கிடைப்பதால், அதனை உடனடியாக அகற்ற பொதுப்பணித்துறை முன்வரவேண்டும் பூவம் பகுதியில் உள்ள வாய்க்கால் தூர்வாரப்பட்டால் அங்குள்ள 50 ஏக்கர் நிலம் பயன்பாட்டுக்கு வரும்.

விவசாயிகள் வங்கி கடன் பெற அடையாள அட்டை அவசியம் என்பதால், அதனை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். முக்கியமாக தமிழகத்தைப் போல் 100சதவீத மானியத்தில் பண்ணை குட்டை அமைக்க புதுச்சேரி அரசு முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால் மழை நீரை சேமிப்பதுடன், மீன் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிக கவனம் செலுத்த முடியும்.

இவ்வாறு விவசாயிகள் வேண்டு கோள் விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com