

தஞ்சாவூர்,
வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி முதல் கட்டமாக கிராம நிர்வாக அதிகாரி அலுவலகங்களிலும், 2-வது கட்டமாக பேரூராட்சி அலுவலகங்களிலும், 3-வது கட்டமாக ஒன்றிய அலுவலகங்களிலும் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.
தற்போது 4-வது கட்டமாக மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் நேற்று மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்திற்காக பா.ம.க.வினர் தஞ்சை ரெயில்நிலையம் அருகே திரண்டனர். அங்கு அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மனு அளித்தனர்
இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைமை நிலைய செயலாளர் கேசவன், மாவட்ட செயலாளர் சங்கர், தொகுதி போராட்டக்குழு தலைவர் அரசூர்ஆறுமுகம், முன்னாள் மாவட்ட செயலாளர் காந்தி, மாநில இளைஞரணி துணைத்தலைவர் விஜயராகவன், உழவர் பேரியக்க துணைத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சரவணன் வரவேற்றார்.
பின்னர் பா.ம.க.வினர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்திஜி சாலையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் அவர்கள் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சாதியினருக்கும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிய மனுவினை மாநகராட்சி மேலாளர் கிளமெண்டிடம் வழங்கினர்.
போலீசார் குவிப்பு
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன், தலைமை நிலைய பேச்சாளர் தமிழ்ச்செல்வன், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகி மணிவண்ணன், சமூக முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபி, கண்ணன், சந்திரசேகரன், வடுவையா, உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் ஜெகதீசன், பா.ம.க. மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தராஜன், வல்லம் பேரூராட்சி தலைவர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பா.ம.க.வினர் போராட்டத்தையொட்டி தஞ்சை ரெயில் நிலையம் மற்றும் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.