ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டனர்

கரூரில் உள்ள ரெட்டை வாய்க்காலை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பார்வையிட்டனர்.
ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி துணை சபாநாயகர் தம்பிதுரை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டனர்
Published on

கரூர்,

கரூர் நகரில் ரெட்டை வாய்க்கால் என்னும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் கழிவுநீர் கலந்து தற்போது சாக்கடையாக மாறி விட்டது. மேலும் குப்பைகள் தேங்கியும், புதர் மண்டியும் காணப்படுகிறது. அமராவதி ஆற்றில் ஆண்டாங்கோவில் பகுதியில் இருந்து பிரிந்து நகரின் மையப்பகுதி வழியாக சென்று பாசன வாய்க்காலில் கலக்கிறது.

இந்நிலையில் ரெட்டை வாய்க்காலில் இருந்து கொசு அதிக அளவில் உற்பத்தியாகி வருவதால், வாய்க்காலை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து டெங்கு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக ரெட்டை வாய்க்காலை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. தற்போது வெங்கமேட்டில் ரத்தினம் சாலை அருகே ரெட்டை வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

சாலைகள் அமைக்க திட்டம்

அப்போது தம்பிதுரை நிருபர்களிடம் கூறுகையில், ரெட்டை வாய்க்காலை தூர்வாரி கழிவு நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரெட்டை வாய்க்காலின் மொத்த நீளம், அகலம் அளவுகளை பொதுப்பணித்துறையினரும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து அளக்க உள்ளது. தூர்வாரி முடித்த பின் வாய்க்காலின் பக்கவாட்டில் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

மேலும் வாய்க்காலின் மேற்பரப்பில் சிமெண்டு தளம் அமைத்து, அதன் அடிப்பகுதியில் கழிவு நீர் செல்லும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேபோல கரூர் நகரில் உள்ள சிறு, சிறு கழிவுநீர் கால்வாய்கள் சரிசெய்யப்பட உள்ளது. கரூர் ஜங்ஷனில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை எண் 7-வரை ரூ.23 கோடி மதிப்பீட்டில் அணுகு சாலை அமைக்கும் பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.

அதிகாரிகள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ரெட்டை வாய்க்காலை தூர்வாரும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடைந்ததும் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றனர். அப்போது மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், உதவி கலெக்டர் சரவண மூர்த்தி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com