சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை

நீலகிரி மாவட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை
Published on

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையான சமையல் கியாஸ் சிலிண்டர்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோவை, கொச்சி ஆகிய இடங்களில் இருந்து தினமும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் லாரிகளில் நீலகிரிக்கு கொண்டு வரப்படுகிறது. அவை ஊட்டியில் உள்ள 4 குடோன்களில் இறக்கி வைக்கப்படுகிறது. அதன்பின்னர் சிலிண்டர் தேவைப்படுபவர்கள் முன்பதிவு செய்வதன் அடிப்படையில், சரக்கு வாகனங்களில் நகரப்பகுதிகள், கிராமப்புறங்களுக்கு வீடு, வீடாக கொண்டு சென்று வழங்கப்பட்டு வருகிறது.

தொற்று பரவும் அபாயம்

இந்த பணியில் வினியோகஸ்தர்கள், டெலிவரி ஊழியர்கள், டிரைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்து சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வருவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக ஊழியர்களுக்கு சளி மாதிரி பரிசோதனை ஊட்டி அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்றது. முன்னதாக அவர்களது பெயர், செல்போன் எண், வெளிமாவட்டத்துக்கு சென்று வந்தார்களா? போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள 4 ஏஜென்சியில் பணிபுரியும் 100 பேரில், 25 பேரிடம் இருந்து கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சமூக இடைவெளி

இதையடுத்து நுகர்வோர்களிடம் இருந்து பணத்தை கையில் வாங்கக்கூடாது. கவரில் வைத்து வாங்க வேண்டும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினி மூலம் அடிக்கடி கைகளை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com