குளத்துப்புதூரில் சேறும், சகதியுமான சாலை: நாற்று நட்டு தி.மு.க.வினர் போராட்டம்

திருப்பூர் குளத்துப்புதூரில் சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குளத்துப்புதூரில் சேறும், சகதியுமான சாலை: நாற்று நட்டு தி.மு.க.வினர் போராட்டம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் சாலையில் பெரியாண்டிபாளையத்தில் இருந்து சின்னாண்டிபாளையம் வரை மூன்று கிலோமீட்டர் தூரத்துக்கு பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தோண்டப்பட்ட குழிகள் ஒரு வருடமாகியும் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இந்த சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.

மங்கலம் வழியாக பல்லடம் மற்றும் கோவை செல்வதற்கு பிரதான சாலையாக உள்ள இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறார்கள். இதன் காரணமாக சேறும், சகதியுமான இந்த சாலையை சீரமைக்க கோரியும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தி.மு.க. சார்பில் குளத்துப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாலையில் நாற்று நட்டனர்

ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி பேசும்போது திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த சாலையை சீரமைக்காவிட்டால் தி.மு.க. தலைமைக் கழகத்தின் உத்தரவைப் பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.

சேறும் சகதியுமான சாலையில் தி.மு.க.வினர் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் முன்னிலை வகித்தார். இதில் வீரபாண்டி பகுதி பொறுப்பாளர் முருகசாமி, கிளை பொறுப்பாளர் முத்துக்குமாரசாமி, நிர்வாகிகள் கீர்த்தி சுப்பிரமணியம், ரத்தினசாமி, சோமசுந்தரம், சுப்பையன், தமிழரசு உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக சாலையை உடனடியாக சீரமைக்க கோரி தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com