முதுமலை புலிகள் காப்பகத்தில் 13 வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 13 வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கிட்டனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் 13 வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு
Published on

கூடலூர்,

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனத்தில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டிகள் மற்றும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை கொண்டு வந்து வளர்க்கப்படுகிறது. நாளடைவில் கும்கியாக பயிற்சி அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது 24 வளர்ப்பு யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். இதற்காக கால்நடை மருத்துவக்குழுவினர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர். தொடர்ந்து உடல் எடை குறையும் யானைகள் மீது தனி கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 1 ஆண்டாக முதுமலை புலிகள் காப்பகத்தில் கால்நடை டாக்டர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வருகிறது. இதனால் யானைகளின் உடல் நலனை பேணும் மருத்துவ பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடும் பணி கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான எடை மையத்தில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதற்காக முதுமலை முகாம்களில் இருந்து இந்தர், பொம்மன், விஜய், கிரி உள்பட 13 வளர்ப்பு யானைகள் பாகன்களின் உதவியுடன் வனத்துறையினர் அழைத்து வந்து உடல் எடையை கணக்கெடுத்தனர்.

அப்போது இந்தர் யானையின் எடை மட்டும் 100 கிலோ அதிகரித்து இருந்தது. மீதமுள்ள யானைகளின் உடல் எடை சராசரியாக 60 கிலோ வரை ஏற்ற இறக்கங்களுடன் இருப்பது தெரியவந்தது. மஸ்து பிரச்சினை, உடல் நலம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மீதமுள்ள 11 வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட வில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

பருவமழை நன்றாக பெய்து வனத்தில் பசும் புற்கள் அதிகம் இருக்கின்ற காலக்கட்டத்தில் வளர்ப்பு யானைகளின் உடல் எடையும் சராசரியாக 100 கிலோவில் இருந்து 350 கிலோ வரை அதிகரிப்பது வழக்கம். தற்போது வறட்சியான காலநிலை தொடங்கி விட்டதால் பசுந்தீவனம் குறைவாகவே கிடைக்கிறது.

உடல் எடை குறைந்த வளர்ப்பு யானைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கூடுதலாக அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். பின்னர் அனைத்து யானைகளும் முதுமலைக்கு அழைத்து செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com