முல்லுண்டு குப்பை கிடங்கு நிரந்தரமாக மூடல் மும்பை மாநகராட்சி அறிவிப்பு

முல்லுண்டு குப்பை கிடங்கு நிரந்தரமாக மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது.
முல்லுண்டு குப்பை கிடங்கு நிரந்தரமாக மூடல் மும்பை மாநகராட்சி அறிவிப்பு
Published on

மும்பை,

மும்பை நகரில் மட்டும் நாள்தோறும் சுமார் 7 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இந்த குப்பைகள் முல்லுண்டு, தேவ்னார் மற்றும் காஞ்சூர்மார்க் பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் கொட்டப்பட்டு வந்தன. இந்த குப்பை கிடங்குகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் அதன் இட வசதி மிகவும் குறைந்தது.

இதையடுத்து வேறு இடத்தில் குப்பை கிடங்கு அமைக்க மராட்டிய அரசிடம் மாநகராட்சி இடம் கேட்டு இருந்தது.

இதுகுறித்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டே, முழு கொள்ளளவை எட்டியதும் தேவ்னார் மற்றும் முல்லுண்டில் உள்ள குப்பை கிடங்குகளை மூட மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட்டிருந்தது.

மேலும் இதே வழக்கில் கடந்த மாதம் அளித்த தீர்ப்பில், 2 மாதத்திற்குள் மாநகராட்சிக்கு குப்பை கிடங்கை அமைப்பதற்காக வேறு இடத்தை ஒதுக்கவேண்டும் என்று மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்தநிலையில் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து முல்லுண்டு குப்பை கிடங்கை நிரந்தரமாக மூடுவதாக நேற்று மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை அறிவித்தது.

இதுகுறித்து அந்த துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-. முல்லுண்டு குப்பை கிடங்கில் இதற்கு மேல் குப்பை கொட்டமுடியாது என்பது மாநகராட்சி குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து நாங்கள் அதை மூடுவதாக முடிவு செய்துள்ளோம்.

காஞ்சூர்மார்க் மற்றும் தேவ்னார் பகுதியில் உள்ள குப்பை கிடங்கும் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிடும் என்பது எங்களுக்கு தெரியும், இவற்றையும் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியாது.

எனவே புதிய குப்பை கிடங்கிற்காக நவிமும்பையில் உள்ள ஐரோலி மற்றும் தலோஜாவில் 2 இடங்களை நாங்கள் அடையாளம் கண்டு வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

மூடப்பட்ட முல்லுண்டு குப்பை கிடங்கு கடந்த 1967-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 24 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இது மும்பையின் 2-வது மிகப்பெரிய குப்பை கிடங்காகும். முதல் இடத்தில் தேவ்னார் குப்பை கிடங்கு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com