கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூரில் ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்திப்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. இங்கு வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். நாகூர் ஆண்டவர் தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் நாகை புதுப்பள்ளி தெரு வழியாக யாஹீசைன் தெரு, நூல்கடை தெரு, வெங்காயகடை தெரு, பெரிய கடை தெரு, நீலா தெற்கு வீதி, கீழவீதி, வடக்கு வீதி, தேரடி தெரு, புது தெரு, சர்அகமது தெரு, கொட்டுப்பாளைய தெரு உள்ளிட்ட 40 தெருக்களின் வழியாக சென்று, பின்னர் அண்ணாசிலை, பப்ளிக் ஆபீஸ் சாலை வழியாக நாகூர் எல்லையை சென்றடையும். பின்னர் நாகூரில் செய்யது பள்ளி தெரு, குஞ்சாலி மரைக்காயர் தெரு, ரெயிலடி தெரு உள்ளிட்ட 14 தெருக்களின் வழியாக சென்று தர்காவின் அலங்கார வாசலை சென்றடையும். இதில் கலந்து கொள்ள நாகூருக்கு பல்வேறு பகுதியில் இருந்து திரளானோர் வருவார்கள்.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்தநிலையில் கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை நகராட்சி சார்பில் நாகூர் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி ஆணையர் ஏகராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அலங்கார வாசல், பெரிய கடைத்தெரு, அரசு மருத்துவமனை சாலை, சிவன் சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் கடைகளின் மேற்கூரைகள், சிலாப்புகள் உள்ளிட்டவைகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன. அப்போது நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகரமைப்பு ஆய்வாளர் செல்வம், நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com