

திருப்பத்தூர்,
வாணியம்பாடி நகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் சுசில் தாமஸ் தள்ளுவண்டி கடைகளை கீழே தள்ளி பழங்களை சேதப்படுத்தினார். இதுகுறித்து சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் சிவன்அருளிடம், நடைபாதை பெண் வியாபாரிகள் அலமேலு, சத்யா மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வாணியம்பாடி தொழிற்சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நகராட்சி ஆணையாளர் மீது தவறு இல்லை என்று மனு அளித்தனர்.
அதில் வாணியம்பாடியில் கொரோனா தொற்று பரவக் கூடாது என்பதற்காக பழக்கடைகளை வைக்க கூடாது என்று பலமுறை எங்களுக்கு ஆணையாளர் தகவல் தெரிவித்தார். நாங்கள் எங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக கடைவைத்தோம். இது எங்களுடைய தவறு தான். நகராட்சி ஆணையாளர் செயல்பாடு எங்களுக்கு சிறிதளவும் வருத்தம் இல்லை. அவர் எங்களிடம் வந்து மன்னிப்புக் கேட்டு விட்டார். எனவே தமிழக அரசு வாணியம்பாடி நகராட்சி ஆணையாளராக மீண்டும் அவரை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.