

பழனி:
கோவை காந்திபார்க் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 54). இவர் பழனி நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இதற்காக அவர் பழனியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் வெங்கடேசன் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த சக ஊழியர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு சென்றனர். பின்னர் அறை கதவை தட்டி பார்த்தபோது எவ்வித பதிலும் வரவில்லை.
அதேவேளையில் அறை உள்பக்கமாக பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் பழனி டவுன் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அறை கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு அவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், அவர் மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.