

திருவள்ளூர்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் அ.தி.மு.க. சார்பில் திருமழிசை, ஆத்துகால் தெரு, திருவள்ளூர் மெயின் ரோடு, தெற்கு மாடவீதி, பிரயாம்பத்து போன்ற 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அ.தி.மு.க. சார்பில் அனுமதியின்றி சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதை பார்த்த தி.மு.க. நிர்வாகிகள் பேரூராட்சி செயல் அலுவலர் ரவியிடம் சுவர் விளம்பரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆனால் அவர் அ.தி.மு.க. விளம்பரங்களை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தி.மு.க. பேரூராட்சி செயலாளர் முனுசாமி தலைமையில், துணை செயலாளர் மகாதேவன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு அ.தி.மு.க.வினரின் விளம்பரங்களை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அதிகாரிகள் இது சம்பந்தமாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சுவர் விளம்பரங்களை அகற்றுவதாக உறுதி அளித்தனர். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக நேற்று திருமழிசை பேரூராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.