

உப்பள்ளி: மனைவியை கிண்டல் செய்ததால் கல்லால் தாக்கி தொழிலாளியை படுகொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேலி, கிண்டல்
தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா குருவினகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 26). கூலி தொழிலாளி. இவருடைய பக்கத்து கிராமமான குரடிகேரியை சேர்ந்தவர் பசவராஜ் (29). இந்த நிலையில் மஞ்சுநாத், குரடிகேரி கிராமத்துக்கு அடிக்கடி வேலை விஷயமாக சென்று வந்துள்ளார். அவ்வாறு செல்லும்போது மஞ்சுநாத், பசவராஜின் மனைவியை கேலி, கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதுகுறித்து அவர், தனது கணவர் பசவராஜிடம் தெரிவித்துள்ளார். இதனால் பசவராஜ், மஞ்சுநாத்தை அழைத்து கண்டித்துள்ளார். ஆனாலும், மஞ்சுநாத் தொடர்ந்து பசவராஜின் மனைவியை கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால் பசவராஜ் ஆத்திரமடைந்தார்.
கல்லால் தாக்கி கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் குரடிகேரி கிராமத்துக்கு மஞ்சுநாத் வேலை விஷயமாக சென்றுள்ளார். அப்போது அவரிடம் பசவராஜ் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது பசவராஜ், அங்கு கிடந்த கற்களை எடுத்து மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கினார்.
கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த மஞ்சுநாத், ரத்த காயங்களுடன் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பசவராஜ், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து மஞ்சுநாத்தை மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மஞ்சுநாத் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து கல்கட்டகி புறநகர் போலீசார் ஆஸ்பத்திரிக்கும், சம்பவ இடத்துக்கும் சென்று விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கேலி, கிண்டல் செய்ததால் பசவராஜ், மஞ்சுநாத்தை கல்லால் தாக்கி கொன்றது தெரியவந்தது.
இதுகுறித்து கல்கட்டகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.