

ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே உள்ள ஸ்ரீலட்சுமிபுரம், யாதவ வடக்குதெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 72). இவருடைய மனைவி வீரலட்சுமி (63). இவர்களுக்கு சின்னத்துரை (35) என்ற மகனும், சசி லட்சுமி (30) என்ற மகளும் உள்ளனர்.
வீரலட்சுமி ஆரல்வாய்மொழி அருகே மாடன்நாடன் குடியிருப்பு பகுதியில் நடைபெறும் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்துக்கு செல்வது வழக்கம். அதேபோல் கடந்த 25ந் தேதி ஜெப கூட்டத்திற்கு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு வீரலட்சுமி சென்றார். பின்னர், அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரை உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் சின்னத்துரை அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரலட்சுமியை தேடி வந்தனர். மேலும், தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் சிக்கினர்
போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் ஆவரகுளம் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களுக்கும், வீரலட்சுமி மாயமான சம்பவத்துக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 வாலிபர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த வாலிபர்கள், 5 பேர் சேர்ந்து வீர லட்சுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, முப்பந்தல் அருகே கண்ணுபொற்றை அடிவாரத்தில் முட்புதரில் வீசியதாக தெரிவித்தனர்.
அழுகிய நிலையில் பிணம்
இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த வாலிபர்களை அழைத்து கொண்டு கண்ணுபொற்றை பகுதிக்கு சென்றனர். அங்கு முட்புதர்களின் மத்தியில் வீரலட்சுமி பிணமாக கிடந்தார். அவர் மாயமான நாளில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது. பின்னர், கொலையாளிகள் பிணத்தை புதர்கள் மத்தியில் வீசி சென்றுள்ளனர்.
அவர் கொல்லப்பட்டு 12 நாட்களுக்கு மேல் ஆனதால், பிணம் அழுகிய நிலையில் எலும்புகள் வெளியே தெரிந்தபடி கிடந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன், நாகர்கோவில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபி, ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், பிடிபட்ட 2 வாலிபர்களிடம் இந்த செயலில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டார்கள் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
துப்பு துலங்கிய செல்போன்
வீரலட்சுமி மாயமானதை தொடர்ந்து அவரது செல்போன் மூலம் துப்பு துலங்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பின்னர், அவர் பயன்படுத்திய செல்போனின் ஐ.எம்.இ.ஐ. எண் மூலம் அந்த செல்போன் எங்கு இருக்கிறது என்பதை ஆய்வு செய்த போது, அது நெல்லை மாவட்டம் ஆவரகுளம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீரலட்சுமியை கொலை செய்த 2 வாலிபர்களை பிடித்தனர்.