கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டி கோவில் முன்பு நாதஸ்வரம்-தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டி கோவிலூர் கோவில் தெப்பக்குளம் முன்பு நாதஸ்வரம்-தவில் ஆகியவற்றை இசைக்கலைஞர்கள் வாசித்தனர்.
கொரோனாவில் இருந்து மக்களை காக்க வேண்டி கோவில் முன்பு நாதஸ்வரம்-தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
Published on

காரைக்குடி,

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், காரைக்குடி அருகே கோவிலூர் கொற்றாளஸ்வரர்-திருநெல்லையம்மன் கோவில் முன்பு உள்ள தெப்பக்குளம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம், தவில் மற்றும் தாளம் வாசிக்கும் கலைஞர்கள் கூடினர். அவர்கள் இறைவனை வேண்டி விநாயகர் துதி, முருகன் பாடல்களை மனம் உருகி இசைத்தனர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் சங்க தலைவர் வேதமூர்த்தி கூறியதாவது:-

கொரோனா தொற்று காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மேலும் இந்தியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருவதால், தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். இதுதவிர பல்வேறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து கடுமையான வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர்.

எனவே இசைக்கலைஞர்கள் சார்பில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கோவில் தெப்பக்குளம் முன்பு இறைவனை நினைத்து, இந்த கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டியும், நலிந்து கிடக்கும் தொழில்கள் மீண்டும் புதுப்பொலிவு பெற வேண்டியும், உலக மக்கள் அனைவரும் இந்த நோயில் இருந்து மீண்டு மகிழ்ச்சியாக வாழவேண்டியும் இறைவனை நினைத்து நாதஸ்வரம் மற்றும் தவில் இசைத்துள்ளோம். கண்டிப்பாக இறைவன் மக்களை காப்பாற்றுவார்.

சிவகங்கை மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான இசைக்கலைஞர்கள், தாளம் மற்றும் தவில் கலைஞர்கள் உள்ளனர். விழாக்காலம் தொடங்க வேண்டிய நேரத்தில், கொரோனா வைரஸ் தாக்கத்தால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இசைக்கலைஞர்கள் எவ்வித வருமானமும் இல்லாமல் வறுமையின் பிடியில் உள்ளனர். எங்களது வறுமையை அறிந்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கினாலும் அவை போதுமானதாக இல்லை. எனவே எங்களை போன்று தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள இசைக்கலைஞர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com