முசிறி, மணப்பாறையில் வீட்டு மனைப்பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம்

முசிறி, மணப்பாறையில் வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
முசிறி, மணப்பாறையில் வீட்டு மனைப்பட்டா கோரி விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
Published on

முசிறி,

முசிறியில் வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். கோவில் நிலங்களில் வசிப்பவர்களை கூடுதல் வாடகை நிர்ணயம் செய்து வெளியேற்றுவதை தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக முசிறி கைகாட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் காஜாமொய்தீன் தலைமை தாங்கினார். தா.பேட்டை ஒன்றிய தலைவர் தங்கவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வீரவிஜயன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் நல்லுசாமி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று கோரிக்கை அடங்கிய 253 மனுக்களை தாசில்தாரிடம் வழங்கினர். மனுக்களை பெற்று கொண்ட தாசில்தார் சுப்பிரமணியன் மனுக்கள் மீது விரைந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதேபோல், மணப்பாறையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீட்டுமனை பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக விவசாய தொழிலாளர் சங்க வட்ட தலைவர் கருப்பையா தலைமையில் கோவில்பட்டி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு இருந்து ஊர்வலமாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரிடம் கோரிக்கை அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

அந்த மனுவில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் அனைவருக்கும் உடனே பட்டா வழங்கிட வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்திட வேண்டும், 100 நாள் வேலையை தொடர்ச்சியாக அனைவருக்கும் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் இடம்பெற்று இருந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com