திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Published on

திருச்சி,

மத்திய அரசு இயற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதுபோல், திருச்சி மாநகரிலும் முஸ்லிம் அமைப்பினர் தொடர்ச்சியாக இரவு, பகல் என போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சென்னையில் சட்டசபையை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும், அதே நேரம் மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் முஸ்லிம் அமைப்பினர் அறிவித்தனர்.

முற்றுகை போராட்டம்

அதன்படி, திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக கலெக்டர் அலுவலகம் அருகில் திரண்டனர். போலீசார் போராட்டத்துக்கு அனுமதி மறுத்ததால், கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி ஜமாத்துல் உலமா சபை தலைவர் ரூஹில் ஹக் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், என்.ஆர்.சி., என்.பி.ஆர். போன்றவற்றுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.போராட்டத்தில் ஜமாத்துல்லா சபை செயலாளர் அப்துல்ரஹீம், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஹாசன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஜாபர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட தலைவர் இப்ராகிம்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஷ்ரப் அலி உள்ளிட்ட முஸ்லிம் அமைப்பை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்ந்து நடக்கும்

போராட்டத்தின் போது நிர்வாகிகள் பேசம் போது, பல மாநிலங்களில் குடியுரிமை திருத்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் கொண்டுவர மாட்டோம் என்று, அந்த மாநில அரசு, அவர்களின் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. ஆனால், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று முதல்-அமைச்சர் கூறிவிட்டதால் நமது போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதாகி விட்டது. எனவே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடக்கும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com