

திண்டிவனம்,
காஷ்மீரில் சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை கண்டித்து முஸ்லிம் அமைப்புகளைச்சேர்ந்தவர்கள் ரோஷணையில் இருந்து பேரணியாக வந்து திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஷேக் தாவூத் ஹஜரத் தலைமை தாங்கினார். முஸ்லிம் மக்கள் கழகம் ஜைனுதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், எழுத்தாளர் காமு இஸ்மாயில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைகழக பேச்சாளர் அப்துல்காதர், த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் ஜெயின்லாப்தீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழ்மாநில செயலாளர் நாகூர்மீரான் ஆகியோர் கண்ட உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறுமி பலாத்கார கொலை மற்றும் மத்திய அரசை கண்டித்தும், நீதி வேண்டியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் யுபிவுல்லாஷ் காஷிபீ, தே.மு.தி.க. நகர செயலாளர் காதர்பாஷா, பள்ளிவாசல் முத்தவல்லிகள், முஸ்லிம் அமைப்பினர், முஸ்லிம் கட்சியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.