சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய எனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சியற்றவர் சரத் பவார் கூறுகிறார்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மற்ற கோரிய தனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சி அற்றவர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
சுஷாந்த் தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிய எனது பேரன் பர்த் பவார் முதிர்ச்சியற்றவர் சரத் பவார் கூறுகிறார்
Published on

மும்பை,

பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ந் தேதி பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த வழக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இதற்கிடையே ஆளும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் பேரனும், துணை முதல்-மந்திரி அஜித்பவாரின் மகனுமான பர்த் பவார் சமீபத்தில் மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கை சந்தித்து சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதிர்ச்சியற்றவர்...

இந்தநிலையில் நேற்று சரத்பவார், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் சந்திப்பு நடந்தது. இதையடுத்து சரத்பவாரை சந்தித்த நிருபர்கள் பர்த் பவாரின் சி.பி.ஐ. கோரிக்கை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

எனது பேரன் கூறிய கருத்துக்கு நான் எந்த வகையிலும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இளைஞரான அவர் முதிர்ச்சியற்றவர்.

எனக்கு மும்பை மற்றும் மராட்டிய போலீசார் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது என்பதை தெளிவாக கூறியுள்ளேன். அதே சமயம் யாரேனும் சி.பி.ஐ. விசாரணை கண்டிப்பாக வேண்டும் என்று கூறினால் அதை நாங்கள் எதிர்க்கவும் விரும்பவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக மராட்டிய அரசு மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை.

விவசாயி குமுறல்

எந்த ஒரு மனிதரும் தற்கொலை செய்துகொள்வது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த தற்கொலை விவாதிக்கப்படும் விதம் ஆச்சரியமளிக்கிறது. சமீபத்தில் நான் சத்தாரா சென்றிருந்தேன். அங்கு ஒரு விவசாயி இதே கருத்தை என்னிடம் கூறினார்.

அவர், சத்தாராவில் இதுவரை 20 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஆனால் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் சுஷாந்த் சிங் மரணத்தை விவாதப்பொருள் ஆக்குவது ஆச்சரியமளிக்கிறது என்று என்னிடம் கூறினார். எனவே சாதாரண மக்கள் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com