உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செலுத்தி எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார்.
உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடங்குகிறது
Published on

மைசூரு:

பாரம்பரிய விழா

கர்நாடகத்தில் பாரம்பரியமிக்க விழாக்களில் மைசூருவில் நடக்கும் தசரா விழாவும் ஒன்றாகும். உலக பிரசித்தி பெற்ற இந்த விழா மன்னர் காலத்தில் இருந்தே வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தசரா விழா கொண்டாடுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அதாவது மைசூரு மாகாணத்தை ஆண்ட மன்னர் கிருஷ்ண தேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையிலும், சாமுண்டீஸ்வரி அம்மன் மக்களை கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசூரனை வதம் செய்த நாளே தசரா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டு வருகிறது.

யானைகளுக்கு பயிற்சி

கடந்த 1971-ம் ஆண்டு வரை மைசூரு தசரா விழா மன்னர் குடும்பத்தினர் வெகுவிமரிசையாக கொண்டாடி வந்தனர். ஆனால் 1972-ம் ஆண்டில் இருந்து கர்நாடக அரசு சார்பில் ஆண்டுதோறும் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தசரா விழா அக்டோபர் மாதம் 7-ந் தேதி(இன்று) தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை நடைபெறும் என்று கர்நாடக அரசு அறிவித்தது. இதையடுத்து மைசூரு தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மைசூரு மாவட்ட நிர்வாகத்தினர், மாவட்ட பொறுப்பு மந்திரி எஸ்.டி.சோமசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்நின்று நடத்தி வந்தனர்.

மேலும் மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் யானைகளும் பல்வேறு முகாம்களில் இருந்து அழைத்து வரப்பட்டு மைசூரு அரண்மனை வளாகத்தில் தங்க வைக்கப்பட்டன. அந்த யானைகளுக்கு அம்பாரி சுமக்கும் பயிற்சி, வெடி சத்தம் கேட்டு மிரளாமல் இருக்கும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

411-வது ஆண்டு தசரா

இந்த ஆண்டு நடக்கும் மைசூரு தசரா விழா 411-வது ஆண்டு தசரா விழாவாகும். ஆண்டுதோறும் மைசூரு தசரா விழாவை முக்கிய பிரமுகர்கள் தொடங்கி வைப்பது வழக்கம். அதுபோல இந்த ஆண்டுக்கான மைசூரு தசரா விழாவை முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் செய்து தொடங்கி வைப்பார் என்றுஅரசு அறிவித்து இருந்தது.

மேலும் மைசூரு தசரா விழாவை தொடங்கி வைக்கும்படி எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு, பசவராஜ் பொம்ம முறைப்படி அழைப்பும் விடுத்து இருந்தார்.

400 பேருக்கு அனுமதி

இந்த நிலையில் உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 8 மணியில் இருந்து 8.45 மணிக்குள் சுபயோக நேரத்தில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பூஜைகள் செய்து தசரா விழாவை எஸ்.எம்.கிருஷ்ணா தொடங்கி வைக்கிறார். கொரோனா பரவல் காரணமாக மைசூரு தசரா விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 400 பேருக்கு மட்டுமே அரசு அனுமதித்து உள்ளது. இதன்பின்னர் இன்று மாலை 6 மணிக்கு மைசூரு அரண்மனை வளாகத்தில் கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. முன்னதாக காலை 10 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை மைசூரு அரண்மனையில் ஜோடித்து வைக்கப்பட்டு உள்ள சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்த உள்ளார். இதுபோல மாலை 6 மணி முதல் இரவு 6.30 மணி வரையும் அவர் தர்பார் நடத்துகிறார். மைசூரு தசராவையொட்டி அரண்மனைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

தசரா விழாவில் கலந்து கொள்ள உள்ள அதிகாரிகள், கலைஞர்கள் கொரோனா பரிசோதனை நெகட்டிவ் அறிக்கை வைத்திருக்க வேண்டும் என்றும், ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தி இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

தங்க அம்பாரியை சுமந்து....

தசரா விழா நடக்க உள்ளதையொட்டி மைசூருவில் உள்ள புராதன சின்னங்கள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் மின்னொளியில் ஜொலிக்கிறது. தசரா விழாவின் இறுதி நாளான 15-ந் தேதி சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து கொண்டு மைசூரு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பன்னிமண்டபம் வரை அபிமன்யு யானை செல்ல உள்ளது.

அந்த யானையை பின்தொடர்ந்து மற்ற யானைகள் ஊர்வலமாக செல்கிறது. பன்னிமரம் வெட்டியதும் தசரா விழா நிறைவு பெறுகிறது. தசரா விழாவையொட்டி மைசூரு நகரமே தற்போது விழாக்கோலம் பூண்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதிரொலியாக மைசூரு மாவட்டம் முழுவதும் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com