

மைசூரு,
முதல்-மந்திரி குமாரசாமி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூருவில் கொண்டாடப்படும் தசரா விழா வரலாற்று சிறப்புமிக்கது.
விஜயநகர சமஸ்தானத்தில் கி.பி. 1,610-ம் ஆண்டு விஜய மன்னர்களால் தசரா விழா கொண்டாடப்பட்டது. காலப்போக்கில் ஸ்ரீரங்கப்பட்டணாவை ஆண்ட ராஜா உடையார் மன்னரால் மைசூரு மாகாணத்தில் தசரா விழா கொண்டாடப்பட்டது.
அப்போது கர்நாடகத்தில் பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு, இலக்கியம் ஆகியவற்றை பறைசாற்றும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய நடனம், மல்யுத்தம் உள்பட கர்நாடகத்தின் வீர விளையாட்டுகளும் இடம்பெற்றது.
இத்தகைய பல்வேறு சிறப்புகளும், பிரசித்தியும் பெற்ற தசரா விழா ஸ்ரீரங்கப்பட்டணாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு மைசூரு சாம்ராஜ்ஜியத்தில் யது வம்ச மன்னர்களால் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. தற்போது மாநில அரசு சார்பில் மைசூரு தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மைசூரு தசரா விழா உலக அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்த தசரா விழாவின்போது மன்னர்கள் தங்க சிம்மானசத்தின் மீது அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவார்கள். அப்போது அவர்கள் மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து வைப்பார்கள். தசரா விழாவில் முக்கிய நிகழ்வாக இது கருதப்படுகிறது.
இந்தியாவில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து கடந்த 1972-ம் ஆண்டு முதல் கர்நாடக அரசு சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாநில அரசால் நடத்தப்படும் இந்த விழாவுக்கு மன்னர் குடும்பத்தினரும் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். தசரா விழாவிற்கு என்று வரலாறு உண்டு.
மைசூரு மாகாணத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் போரில் எதிரிகளை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல் மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன், மகிஷா சூரனை வீழ்த்தியதை நினைவுகூறும் வகையில் தசரா விழா கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியை முன்னிட்டு 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி 408-வது தசரா விழா கோலாகலமாக தொடங்கியது. 10-ந் தேதி தொடங்கிய தசரா விழா 19-ந் தேதி(நாளை) வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. விழாவின் கடைசி நாளான 19-ந் தேதி(விஜயதசமி அன்று) ஜம்பு சவாரி ஊர்வலம், அதன்பின்னர் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் தசரா விழா நிறைவடைகிறது.
இந்த ஆண்டு தசரா விழாவை இன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவரும், எழுத்தாளருமான சுதா மூர்த்தி, மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் தங்கத்தேரில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, மலர்கள் தூவி தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து மைசூரு முழுவதும் விழாக்கோலம் பூண்டது. மைசூரு நகரில் எங்கு பார்த்தாலும் தோரணங்கள், அலங்கார மின்விளக்குகள் என மைசூரு நகரமே களை கட்டியது. முக்கியமாக மைசூரு அரண்மனை முழுவதும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. அதேபோல் மைசூருவில் உள்ள முக்கிய இடங்களும் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.
தசரா விழா தொடங்கிய நாள் முதல் மைசூருவில் இசை நிகழ்ச்சிகள், கலாசார நடனங்கள், நாடகங்கள், பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், இளையோருக்கான விளையாட்டு போட்டிகள், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சி, பெண்களுக்கான போட்டிகள், தசரா பூங்கா என பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.
அதேபோல் மைசூரு அரண்மனையில் நவராத்திரி விழா, இளவரசர் யதுவீர் தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துவது, அரண்மனையில் தசராவையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்துவது, விளையாட்டு போட்டிகள் நடத்துவது, யோகா பயிற்சி அளிப்பது என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. தசரா விழாவின் 8-வது நாளான நேற்றும் மைசூருவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதேபோல் மைசூரு அரண்மனையிலும் பல நிகழ்ச்சிகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்புசவாரி ஊர்வலமாகும். இதற்காக தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானை உள்பட 12 யானைகள், முகாம்களில் இருந்து மைசூரு அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டன. அவைகள் அரண்மனை வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டன. மேலும் அவற்றுக்கு நடைபயிற்சி, பீரங்கி வெடிக்கும் சத்தத்தை கேட்டு மிரண்டு ஓடாமல் இருக்க பயிற்சி, ஜம்பு சவாரி ஊர்வல பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதேபோல் ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் குதிரைப்படைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
மேலும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் போலீசார், நடன குழுவினர், கலைக்குழுவினர் ஆகியோரும் பயிற்சி பெற்றனர். ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகைகளும் நடந்தன. இதில் போலீசார் உள்பட அனைவரும் கலந்து கொண்டு ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்கேற்பது போலவே ஊர்வலமாக சென்றனர். குறிப்பாக தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜூனா யானைக்கு 750 கிலோ எடை அளவில் மணல் மூட்டைகள் கட்டப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. விழாவின் 8-வது நாளான நேற்றும் ஜம்புசவாரி ஊர்வலத்தில் பங்குபெறும் யானைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நாளை(வெள்ளிக்கிழமை) மைசூருவில் கோலாகலமாக நடக்கிறது.
விழாவையொட்டி நாளை காலை 8 மணி முதல் 9 மணி வரை அரண்மனை வளாகத்தில் அமைந்திருக்கும் கரிகல் தொட்டி மைதானத்தில் மல்யுத்த போட்டி நடக்கிறது. இதில் மல்லுக்கட்டும் 2 பேரில் ஒருவருக்கு ரத்தம் சிந்தியதும் அத்துடன் மல்யுத்த போட்டி நிறுத்தப்பட்டு விடும். அதையடுத்து இளவரசர் யதுவீர் தங்க சிம்மானசத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்துகிறார். பின்னர் அவர் அரண்மனை வளாகத்தில் திரிணேத்தீஸ்வரர் கோவில் முன்பு அமைந்திருக்கும் பன்னி மரத்திற்கு பூஜை செய்கிறார்.
அதைத்தொடர்ந்து அரண்மனை முன்பு உள்ள நந்தி தூணுக்கும், அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் முதல்-மந்திரி குமாரசாமி நாளை மதியம் 2.30 மணியளவில் சிறப்பு பூஜைகள் செய்கிறார்.
முதலில் அலங்கார வண்டிகள், நடன குழுவினர், கலைக்குழுவினரின் ஊர்வலம் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் மைசூரு மாவட்டம் மட்டுமல்லாது, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், திபெத் மக்கள் ஆகியோரின் கலைக்குழுவினரும் கலந்து கொள்கின்றனர். மொத்தம் 72 கலைக்குழுவினர் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். அதேபோல் கர்நாடகத்தின் கலாசாரம், பண்பாட்டை விளக்கும் வகையில் 45 அலங்கார வண்டிகள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றன.
அந்த ஊர்வலம் புறப்பட்டு முடிவதற்கு கடைசி 30 நிமிடங்களுக்கு முன்பு அர்ஜூனா யானை மீது சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரி கட்டப்படுகிறது. இதையொட்டி அர்ஜூனா யானை உள்பட அனைத்து யானைகளுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. அதையடுத்து அர்ஜூனா யானை தங்க அம்பாரியை சுமந்து கொண்டு ராஜ நடைபோட்டு அரண்மனை முன்பு அமைக்கப்பட்டுள்ள மேடை அருகில் வந்து நிற்கும்.
அதனுடன் 9 யானைகளும் ராஜ நடைபோட்டு அணிவகுத்து வந்து நிற்கும். பின்னர் அரண்மனை முன்பு வைத்து சரியாக 3 மணியில் இருந்து 3.16 மணிக்குள் 21 முறை பீரங்கி குண்டுகள், வாண வேடிக்கைகள், தேசிய கீதம், போலீசாரின் பேண்டு வாத்திய இசை ஆகியவை முழங்க முதல்-மந்திரி குமாரசாமி ஜம்பு சவாரி ஊர்வலத்தை தொடங்கி வைக்கிறார்.
இதில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், இளவரசர் யதுவீர், மந்திரிகள் ஜி.டி.தேவேகவுடா, சா.ரா.மகேஷ், மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஜம்பு சவாரி ஊர்வலம் மைசூரு அரண்மனையில் இருந்து புறப்பட்டு பன்னிமண்டபம் அருகே உள்ள தீப்பந்து விளையாட்டு மைதானம் வரை 5 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தை காண கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மைசூருவில் சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி போலீசார் கண்காணித்து வருகிறார்கள். உலகப்புகழ்பெற்ற இந்த ஜம்பு சவாரி ஊர்வலத்தைக் காண மக்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.