

கொடைக்கானல்:
கொடைக்கானல் வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் உள்ளன.
இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்துவதுடன் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்தநிலையில் நேற்று காலை கோல்ப் கிளப் அருகே ஒரு காட்டெருமையும், நாயுடுபுரம் பச்சை மரத்து ஓடை அருகே மற்றொரு காட்டெருமையும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது.
இதை பார்த்த பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாவட்ட வன அதிகாரி திலீப் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு சென்று, இறந்து கிடந்த காட்டெருமைகளை பார்வையிட்டனர்.
ஆனால் அந்த 2 காட்டெருமைகளும் எப்படி இறந்தன என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கால்நடை டாக்டர் ஹக்கீம் மற்றும் மருத்துவக்குழுவினர் 2 காட்டெருமைகளின் உடல்களை பரிசோதனை செய்தனர்.
பின்னர் காட்டெருமைகளின் உடல்கள் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.